பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

கெடிலக்கரை நாகரிகம்


வெளியாகிப் பெருக்கெடுத்தோடியது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீரின் அளவும் விரைவும் இருந்தன. ஒயா அரக்கனைப்போல நிற்காமல் நீர் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. இதைப் பெரிதுபடுத்திப் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்ததைச் சிறு வயதில் கேட்ட நினைவு இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், நெய்வேலியில் நிலக்கரி இருப்பது பின்னர் 1948இல் கண்டுபிடிக்கப்பட்டது.

எளிய நிலையில் பொட்டல் வெளியாகக் கிடந்த நெய்வேலி இப்போது பெற்றிருக்கும் மாபெருஞ் செல்வ நிலையை விளக்கத் தேவையில்லை. ஏறக்குறைய நூறாயிரம் (இலட்சம்) மக்கள் வாழும் பெருநகராக நெய்வேலிப் பகுதி இன்று திகழ்கிறது. நெய்வேலிப் பகுதி இன்று தமிழக அரசின் ஆட்சிக்கு உட்படாமல், மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு’வின் நேரடி ஆட்சியின்கீழ் உள்ளது. இங்கே சிறந்த குடியிருப்புகள், உயர்நிலைப் பள்ளி, திரைப்பட மாளிகை, மருத்துவமனை முதலியனவாக வசதியளிக்கும் பல்வேறு நகர் உறுப்புகளும் உள்ளன.

நெய்வேலிப் பகுதியில் இருநூறு கோடி டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக 1951இல் ஆராய்ச்சி வல்லுநர்களால் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் நிலக்கரி எடுக்கும் பொறுப்பை மேற்கொண்டு ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு’ (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்) என்னும் குழுவை ஏற்படுத்தி வேலையைத் தொடங்குவித்தது. இப்போது ஆண்டு தோறும் பல இலட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, அனல் மின்சார நிலையம், அடுப்புக் கரிக்கட்டித் தொழிற்சாலை, யூரியா உரத் தொழிற்சாலை முதலியனவும் நிறுவப்பட்டுச் செயல்படுகின்றன. இன்னும் இவை தொடர்பாகப் பல்வேறு வகைத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுப் பல்வேறு வகைப் பொருள்கள் உண்டாக்கப்பட விருக்கின்றன. நிலக்கரித் திட்டத்தை மையமாகக் கொண்டு இங்கே ஏற்பட்டிருக்கும் 110 ஏக்கர் பரப்பளவுடைய நீர்த் தேக்கம் மிகவும் காணத்தக்கது. பல்லாயிரவர் இங்கே பணி செய்து பிழைக்கின்றனர்.

மாபெருஞ் செல்வச் செழிப்பிற்குக் காரணமாயுள்ள நெய்வேலி நிலக்கரித் திட்டம், பொதுவாகத் தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டத்தின் - பெருமைக்கு உரியதாயினும், சிறப்பாகக் கெடிலக்கரை நாகரிகத்தின் ஏற்றத்திற்கு உரியதாகும்.