பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

கெடிலக்கரை நாகரிகம்


வட்டங்களுள் இவ்வளவு ஏற்றத் தாழ்விற்குரிய காரணமாவது:கெடிலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் தோன்றுகிறது; அதனால் அங்கே பயன் ஒன்றும் இல்லை; மேலும் அவ்வட்டம் மலையும் காடும் மிக்கது. அடுத்து, கெடிலம் திருக்கோவலூர் வட்டத்தில் வளர்ச்சி பெற்று ஒரளவு பயன் அளிக்கிறது. அதனால் அங்கே முந்திய வட்டத்தினும் மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். மேற்கொண்டு கெடிலம் கடலூர் வட்டத்தில் பெருவளர்ச்சியடைந்து பெரும் பயன் தருகிறது; மற்றும் கடலூரில் கடலிலே கலக்குமிடத்தில் துறைமுகத்தையும் பெற்றுள்ளது; இந்த வசதியால், கடலூரை ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராகவும், இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகவும் கெடிலம் ஆக்கியுள்ளது; இதனால் முந்திய இரண்டு வட்டங்களினும் கடலூர் வட்டத்தில் மக்கள் மிகப் பெருகியுள்ளனர். இதிலிருந்து, ஆற்றங்கரைப் பகுதிகளில் மக்கள் மிகுதியாக வாழ்வர் என்னும் உண்மை மெய்ப்பிக்கப்படுகிறது; இந்த உண்மை, கெடிலக்கரை வளத்திற்கும் நாகரிகத்திற்கும் சிறந்த சான்றாகிறது.

மதங்கள்

இந்த நாட்டின் மதம், இந்துமதம் எனப்படுகின்ற சிவநெறியாம் சைவமும், திருமால் திருநெறியாம் வைணவமுமே. மற்ற பெளத்தம், சமணம், சீக்கியம், இசுலாம், கிறித்துவம் முதலிய மதங்கள் எல்லாம் இந்த நாட்டிற்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்த புது மதங்களேயாம். வந்த மதங்களுள் பெளத்தமும் சமணமும் பழமையானவை. சங்க காலந்தொட்டு இடைக்காலம் வரை - அஃதாவது கி.மீ. 600 முதல் கி.பி.1300 வரை பெளத்தமும் சமணமும் திருமுனைப்பாடி நாட்டில் மாறிமாறி வளர்ந்தும் குறைந்தும் கால் கொண்டிருந்தன. பிற்காலத்தில் வளர்ச்சி அறவே நின்று வரவரத் தேயத் தொடங்கி விட்டது. புத்த மதத்தினர் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகமிகக் குறைந்து விட்டனர். சமணத்தில் 6000 அல்லது 7000 மக்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்தால் பெரிய செய்தியாம். இவர்கள், திருக்கோவலூர், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வட்டங்களில் உள்ளனர்; மற்ற வட்டங்களில் அவ்வளவாக இல்லை எனலாம். கெடிலக்கரை வட்டங்கள் மூன்றனுள் திருக்கோவலூர் வட்டத்தில் திருநறுங்குன்றம், மருதூர் முதலிய இடங்களில் சமணர்கள் குழுவினராக வாழ்கின்றனர்.

இந்துக்களுக்கு அடுத்தபடி இசுலாமியரே மிகுதியாயுள்ளனர். இம்மாவட்டத்தில் 90,000 இசுலாமியர் உளர் எனலாம். இசுலாம் 14ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்