பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களும் வாழ்க்கை முறையும்

415


நாட்டிற்குள் புக்கு வேரூன்றத் தொடங்கிவிட்டது. 14ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்த வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் தன் பங்காளிப் பாண்டியனை வெல்வதற்காக டில்லியிலிருந்த முசுலீம் மன்னனின் உதவியை நாடினான்; அம்முசுலீம் மன்னனுடன் மதமும் வந்தது. மேற்கொண்டும் பீஜப்பூர் சுல்தான், கோல்கொண்டா சுல்தான், ஐதராபாத் நிசாம், ஆர்க்காடு நவாப் முதலியோரின் ஆட்சி தென்னாட்டில் ஏற்பட்டபோதெல்லாம் முசுலீம் மதமும் வேரூன்றி வளரத் தொடங்கியது. பீஜப்பூர் சுல்தானது ஆட்சிக் காலத்தில் 1640ஆம் ஆண்டு தொடங்கி 1677 வரை கூடலூர் இசுலாமாபாத் என்று அழைக்கப்பட்டமை ஈண்டு நினைவு கூரத்தக்கது. முசுலீம் மக்களுள் சிலர் அரசு அலுவல், வாணிகம், மருத்துவம் முதலிய உயர்தொழில்கள் புரிகின்றனர்; ஒரு சிலர் தறி நெய்தற்கு வேண்டிய அச்சு கட்டுதல், பஞ்சடித்தல், இலாடம் அடித்தல், ஈயம் பூசுதல், பாய் நெசவு, வெற்றிலை பயிரிடல், வெற்றிலை விற்பனை முதலிய சிறுதொழில்கள் புரிகின்றனர். கெடிலக்கரைப் பகுதியில் கூடலூர், நெல்லிக்குப்பம் முதலிய இடங்களில் முசுலீம்கள் தொகுப்பாக வாழ்கின்றனர். இவர்களுள்ளும் பட்டாணியர், லப்பை, பஞ்சுகொட்டி, மரைக்காயர் எனப் பலவகையினர் உளர்.

இசுலாமியருக்கு அடுத்தபடியாகக் கிறித்தவர்களைச் சொல்லலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஏறக்குறைய 65,000 கிறித்தவர்கள் உளர் எனலாம். கிறித்தவம் 17ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே தமிழகத்துள் புகுந்துவிட்டது. இவர்களுள் கத்தோலிக்கர், பிராடஸ்டன்ட் என்னும் இரு பிரிவினர் உளர். கிறித்தவம் மேலை நாடுகளிலிருந்து கிறித்தவச் சபைகளின் வாயிலாக இங்கே நுழைந்தது. ஏழை எளியவர்களுட் சிலரும் தாழ்த்தப்பட்ட மக்களுட் சிலரும் எளிதில் கிறித்தவ மதத்திற்கு மாறினர். கெடிலக்கரப் பகுதியில் திருக்கோவலூர், பண்ணுருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், (இப்போது) நெய்வேலி முதலிய ஊர்களில் கிறித்தவர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். மற்ற ஊர்களிலும் கடலூரில் மிகுதி எனலாம். கடலூர்ப் புதுநகர்ப் பகுதியில் கத்தோலிக்கரும் முதுநகர்ப் பகுதியில் பிராடஸ்டன்ட் கிறித்தவரும் மிக்குள்ளனர்.

தமிழகத்திற்கு வந்த பிற மதங்களுள் பெளத்தம், சமணம், இசுலாம், கிறித்தவம் என்னும் நான்கும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பெளத்தமும் சமணமும் இந்திய நாட்டு மதங்கள்; இசுலாமும் கிறித்தவமும் வெளிநாட்டு மதங்கள்; அப்படியிருந்தும் தென்னார்க்காடு மாவட்டத்தில் பெளத்தம்