பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களும் வாழ்க்கை முறையும்

417


இனத்தவர் வன்னியரே. இவர்கள் ‘வன்னிய குல க்ஷத்திரியர்’ என்றும் சொல்லப்படுவர். இந்த இனத்தவர் பெயருக்குப் பின்னால் படையாட்சி, நாயகர், கவுண்டர், பிள்ளை, இராயர், பூசாரி, உடையார், தேவர் முதலிய பட்டப் பெயர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் உடல் உரமும் உழைக்கும் ஆற்றலும் உதவி செய்யும் உயர்ந்த உளப்பான்மையும் உடையவர்கள், உழவுத் தொழில் புரிபவர்கள். இந்த நாட்டின் உழைப்பாளிப் பெருங்குடி மக்களாகிய இவர்கள், இவ்வளவு நாள் அடக்கப்பட்டும் அடங்கியும் பின்தங்கியிருந்தனர். இந்த இருபதாம் நூற்றாண்டில் விழிப்பெய்தி முன்னேறி வருகின்றனர். இவர்களைக் குறிக்கும் பல்வேறு பட்டப் பெயர்கள், இவர்கள் பண்டு படைஞராகவும் படைத்தலைவராகவும் இருந்ததைப் புலப்படுத்தும். இவ்வினத்தவர் பெரும்பாலான ஊர்களில் பெரும்பாலராகக் குழுவாக வசிக்கின்றனர்.

வன்னியருக்கு அடுத்தபடியாக மிக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், அரிசனர் என்றும் ஆதித் திராவிடர் என்றும் சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட மக்களாவர். இவர்கள் தாழ்ந்த மக்கள் அல்லர், பிறரால் தாழ்த்தப்பட்ட மக்களே. இப்பகுதியில் இவர்கள் பறையர் என்னும் பெயரால் சுட்டப்படுகின்றனர். ஒவ்வோர் ஊருக்கும் அப்பால் ‘சேரி’ என்னும் பெயருடைய குடியிருப்புகளில் இவர்கள் தங்களுக்குள் குழுவாகவும், பிற இனத்தவரினின்றும் தனியாகவும் வாழ்கின்றனர். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள், உழவுத் தொழிலும் கூலி வேலைகளும் செய்து பிழைக்கின்றனர். தீண்டாதவர்கள் என ஒதுக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று அவ்விழிவு நீங்கி மற்றவர்போலவே பல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.

அடுத்தபடி மிகுந்த எண்ணிக்கையினர் கைக்கோளர் எனப்படும் செங்குந்த முதலியாராவர். இவர்களும் பல ஊர்களில் குழுகுழுவாக வாழ்கின்றனர். இவர்களின் குலத்தொழில் நெசவு, நெசவு செய்பவர்கள் ஏழையர்களாகவும், வெளிநாடுகளுடன் கைலி வாணிகம் செய்பவர்கள் பெருஞ் செல்வர்களாகவும் இருக்கின்றனர். அடுத்து உடையார், நாயடு, ரெட்டியார் முதலிய இனத்தவர்கள், சிற்சில ஊர்களில் ஓரளவு குழுவாக வசிக்கின்றனர். மற்றபடி, வேறிடங்களில் வாழ்கின்ற பல்வேறு வகை வேளாளர், பிராமணர், பல்வேறு தமிழ்ச் செட்டிமார்கள். இலிங்க தாரிகள், கம்மாளர், அகமுடையார், இடையர், வாணியர், நாடார், குயவர், செம்படவர், கம்மவார், சேடர், சாலியர், சேணியர், தேவாங்கர், சாத்தானியர், வண்ணார், நாவிதர், குறும்பர், ஒட்டர், இருளர், வள்ளுவர்,
கெ-27