பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலத்தின் பயணமும் துணைகளும்

41


பழைய கதை. பிற்காலத்தில் பெண்ணையாற்றில் அணை கட்டப்பட்டிருப்பதால் பெண்ணையாற்றிலிருந்து ஓரளவு தண்ணீர் மலட்டாற்றிற்குக் கிடைக்கிறது. இது பெண்ணை யாற்றில் பிரிகிற இடத்திலிருந்து 16 கி.மீ. தொலைவு வரை ஓரளவு நீர் உடையதாகி 4,400 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதியும் செய்கிறது. அதன் பின்னர், போதிய நீர்வளம் இன்றி வெற்று வடிகாலாக ஓடிவந்து கெடிலத்தில் இணைகிறது.

மலட்டாற்றினால் கெடிலத்தைவிடப் பெண்யைாற்றுக்கே நன்மை மிகுதி. மலட்டாற்றினால் கெடிலத்திற்கு நன்மையை விடத் தீமையே மிகுதி எனலாம். பெண்ணையாற்றிலிருந்து மலட்டாற்றின் வாயிலாகக் கெடிலத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீராவது கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், வெள்ளக் காலத்தில் பெண்ணையாற்றின் அரக்க வெள்ளத்திற்கு ஒரு போக்குக் காட்டும் முறையிலேயே மலட்டாறு அமைந்துள்ளது. பெண்ணையாற்று வெள்ளத்தின் ஒரு பகுதி மலட்டாற்றில் திரும்பிவிடுவதால் அதன் வேகம் தணிய, அதன் கரையிலுள்ள பகுதிகள் ஓரளவு தப்புகின்றன. அதே நேரத்தில் அந்த அரக்க வெள்ளம் மலட்டாற்றின் வழியாகக் கெடிலத்தில் பாய்வதால் கெடிலக்கரைப் பகுதிகள் கேடுறுகின்றன.

வெள்ளக் காலத்தில் மட்டும் பெண்ணையாற்றிலிருந்து கெடிலத்திற்குக் கிடைக்கும் இந்த நீர்க்கொடை, மிகவும் வயிறு நிரம்பிவிட்ட ஒருவரது வாயில் மேலும் வலிந்து திணிக்கப்பட்ட உணவுப் பொருள் போன்றதாகும். பெண்ணையாறு தன்னால் தாங்க முடியாத சுமையின் ஒரு பகுதியைக் கழித்துக் கெடிலத்தின் தலையில் கட்டிவிடுகிறது என்றும் கூறலாம். பெண்ணைக்கும் கெடிலத்திற்கும் இடையே இந்த வேலையைச் செய்யும் தூதுவன்தான் மலட்டாறு. பெண்ணையாற்றின் வேகத்தைத் தடுப்பதற்காக இடையாறு என்னும் இடத்தில் மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புக்கரை போன்ற சிறு அணையை உடைத்துக்கொண்டு அரக்க வெள்ளம் ஓடி வந்து கெடிலத்தை ஒரு கை பார்த்து விட்டதுண்டு. அந்தோ, அதற்குமேல் மலட்டாறுதான் என்ன செய்யும்! எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கெடிலமோ, பெண்ணையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் எளிய இரவலனாக இல்லாமல் தலைக்குமேல் தனக்குத் துன்பம் உள்ள போதும், பெண்ணையாற்றின் துன்பத்திலும் பங்கு கொள்ளும் பெருந்தகையாளனாகக் காட்சியளிக்கிறது. கெடிலத்திற்கு இப்படியொரு பெருமையைத் தேடித்தந்த பெருமை