பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

கெடிலக்கரை நாகரிகம்


உருதுமொழி பேசுகின்றனர். தமிழக முசுலீம்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். இங்கே மராத்தியரின் ஆட்சி நடந்தபோது மராத்தியர் சிலர் வந்து குடியேறினர்; இவர்கள் மராத்திமொழி பேசுகின்றனர். ராவ், ராஜா என்னும் பட்டப் பெயர்கள் இவர்கட்கு உண்டு. பட்டுநூல்காரர் எனப்படும் செளராஷ்டிரரும் இவண் ஒரு சிலர் உளர். இவர்கள் பாகவதர் எனச் சாதிப்பட்டம் போட்டுக் கொள்கின்றனர்; பேசும் மொழி செளராஷ்டிரம். இன்றுள்ள இந்தி மொழியின் நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கிறித்தவருள் பல்வேறு இனத்தவரும் உள்ளனர்; அவ்வவ் வினத்தவர் தத்தம் தாய் மொழி பேசுகின்றனர். இதுகாறுங் கூறி வந்த மதத்தவர், சாதியினர், மொழியினர் அனைவருமே பொதுவாகத் தமிழ் மொழி பேசுகின்றனர்.

இத்தனை மொழிகள் இருக்கவும், ஆரியம் சமசுகிரும் எனப்படும் வடமொழியும் நின்று நிலைத்துள்ளது. பிராமணர் சிலர். இம்மொழியைப் படித்து வருகின்றனர். நாடு முழுவதும் திருக்கோயில் பூசனை, பிறப்பு - திருமணம் - இறப்பு முதலியவை தொடர்பான சடங்குள் முதலிய பல்வேறு துறைகளில் பெரும்பாலும் வடமொழியின் ஆட்சியே இன்றும் (1967) காணப்படுகிறது. இது போலவே, கல்வித்துறை, வணிகத்துறை, ஆட்சித்துறை முதலியவற்றில் ஆங்கில மொழியின் உடும்புப் பிடி இன்றும் (1967) உறுதியாகவே உள்ளது. இசையரங்குகளில் தெலுங்கும் வடமொழியும் பேராட்சி புரிகின்றன.

ஆனால், எல்லாத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்கி ஆட்சி புரிய வேண்டும் என்னும் ஒருவகை இயக்கம் இப்போது உருவாகி நடைபெற்று வருகிறது; இதில் வெற்றி முகமும் தெரிகிறது. இடையில் எத்தனையோ மொழிகள் வரக்கூடும். அவ்வாறே போகவுங் கூடும். பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராகிருதமொழி எப்போதோ மறைந்து போயிற்று. பின்னர் வடமொழிக்கும் தென்மொழிக்கும் இடையே பாலமாக அமைக்கப்பட்ட கிரந்தம் என்னும் மொழி மறைந்து கொண்டே வருகிறது. அல்லது மறைந்த நிலையில் இருக்கிறது எனலாம். வந்த மொழி எந்த மொழியும் அழிந்துபோக வேண்டியதில்லை. ஆட்சி செலுத்தாமல் இருந்தால் போதும்! ஆனால் சொந்த மொழி தமிழ் எவ்வளவோ அழிந்துபோய்விட்டது என்பதை மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாது!

வாழ்க்கை முறைகள்

தமிழக முழுதும் பெரும்பாலும் வாழ்க்கை முறைகள் ஒத்திருப்பினும், சிறுபான்மை இடத்திற்கு இடம்