பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

கெடிலக்கரை நாகரிகம்


எத்தனை பிள்ளையானாலும் மருத்துவ மனையில் பிறப்பதற்குத் தடையில்லை - இன்று அதுதான் பெரும்பாலும் நடைபெறுகிறது. முதல் பிள்ளை சித்திரைத் திங்களிலும் புரட்டாசித் திங்களிலும் பிறப்பது கெடுதி என்று சொல்லப்படுகிறது. பிறக்கும்போது பிள்ளை கழுத்தில் குடலாகிய மாலை போட்டுக் கொண்டு பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்றும், குடலாகிய கொடி சுற்றிக் கொண்டு பிறந்தால் குடிக்கு ஆகாது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு மாலைபோட்டுக் கொண்டும் கொடி சுற்றிக் கொண்டும் பிறந்து விட்டால், முறையே தாய் மாமனும் தந்தையும் வாயில் தண்ணிர் ஊற்றிக் கொண்டு பிறந்த குழந்தையின்மேல் கொப்பளித்துத் துப்ப வேண்டும்; துப்பினால் துன்பம் விலகிவிடுமாம். இதற்கு இன்னும் ஏதாவது ‘சாந்தி’ செய்வதும் உண்டு.

பொதுவாக ஆண்கள் இரட்டைப்படைப்பேறாக அஃதாவது, இரண்டாவது - நான்காவது குழந்தையாகப் பிறக்க வேண்டுமாம்; பெண்கள் ஒற்றைப் படைப்பேறாக - அதாவது, மூன்றாவது ஐந்தாவது குழந்தையாகப் பிறக்க வேண்டுமாம். இவ்வாறு பிறந்தால்தான் வளமாக வாழ்வார்களாம். இது சார்பான பழமொழிகள் வருமாறு:

‘நான்காம் பேறு ஆணுக்கு நாதங்கி (தாழ்ப்பாள்) எல்லாம் பொன்னு.’
‘அஞ்சாம் பேறு பெண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது.’
‘ஆறாம் பேறு பெண்ணு ஆறாக்கினாலும் ஆக்கும் - நீறாக்கினாலும் ஆக்கும்’
‘ஆறாம் பேறு ஆணு ஆனை கட்டி வாழும்’.
‘ஏழாம் பேறு பெண்ணு இறவானம் எல்லாம் பொன்னு’
‘எட்டாம் பேறு பெண்ணு எட்டிப் பார்த்த இடம் குட்டிச்சு வரு’
‘எட்டாம்பேறு ஆணு வெட்டி அரசாளும்’.

பேறுக் கணக்குப் போலவே பிறந்த நாளும் (நட்சத்திரமும்) கருதப்படுகின்றது. இது சார்பான பழமொழிகளாவன:

‘அகவணியில் பிறந்தவர் அசுவம் (குதிரை) ஏறுவர்’
‘பரணியில் பிறந்தவர் தரணியை ஆள்வர்’
‘அவிட்டத்தில் பிறந்தவர்க்குத் தவிட்டுப் பானை யெல்லாம் காசு’
‘பூராடத்தில் பிறந்தவர் போராடுவர்’