பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

கெடிலக்கரை நாகரிகம்


விழாப்போல் விரிவாக நடத்துகின்றனர். இந்தக் காலத்தில் பெரும்பாலார் விழா ஒன்றும் செய்யாது, ஆடுமாடுகளை மந்தைக்கு ஒட்டியனுப்புவதுபோல் பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். ஆனால், அந்தக் காலத்தில் ஆசிரியரிடம் அனுப்பும் முதல் நாள் ஒரு சிறப்பு நாளாகவே கொண்டாடப்பட்டது.

பெண் பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளையே பெரும்பேறாகக் கருதும் வழக்கம் இங்கும் உள்ளது. ஆனால் பத்து வயது நிறைந்ததுமே, ஆண் பிள்ளைகளினும் பெண் பிள்ளைகளை மிகவும் கவனமாக வளர்க்கின்றனர்; அவர்தம் கற்புடைமையைக் காப்பதில் பெற்றோர் பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். பெண்பிள்ளைகள் பருவம் எய்தியதை ஒரு விழாவாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு ‘மஞ்சள் நீராட்டு விழா’, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்றெல்லாம் பெயர் கூறுகின்றனர். எளிய பேச்சு வழக்கில் ‘மஞ்சள் தண்ணீர் சுற்றுதல்’ என்று சொல்வர். பெண்கள் எய்தும் இந்த நிலை, வயதுக்கு வருதல், பருவம் அடைதல், நன்மையாதல், பெரிசாதல், பெரிய மனுவியாதல், பூப்பு எய்துதல் என்றெல்லாம் பெயர் சுட்டப்படுகிறது. பூப்பு எய்திய பெண்ணைத் தனியிடத்தில் வைப்பர். சடங்கு முடிந்ததும் உள்ளே அழைத்துக் கொள்வர். ஒன்பதாம் நாளுக்குமேல் குறிப்பிட்ட வசதியான ஒரு நாளில் மாலை வேளையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். பெற்றோர்கள் பருவம் எய்திய பெண்ணை முன்போல் வெளியில் அனுப்பமாட்டார்கள்; ஆடவருடன் பேச விடமாட்டார்கள்; கணவன் கையில் ஒப்படைக்கும் வரையும் கண்ணைபோல் காத்து வருவர். சில குடும்பங்களில், சிறைச்சாலைக் கைதிகளைப் போல வயதுக்கு வந்த பெண்களை உள்ளே அடைத்துப் பூட்டாமல் பூட்டி வைப்பதும் உண்டு. அந்தோ! இந்தக் கொடுமை இப்போது கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.


“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”

என்பது வள்ளுவனாரின் வாய்மொழி யன்றோ?

திருமணம்

இந்தப் பகுதியில் தமிழ்ப் பெருங்குடி மக்களுள் மாப்பிள்ளை வீட்டார்தாம் பெண்தேடுவது வழக்கம். பெண்வீட்டாராகச் சென்று மாப்பிள்ளை தேடும் வழக்கம் இல்லை. பெண்வீட்டார் தாமாகச் சென்று மாப்பிள்ளை தேடுவது இழிவாகக் கருதப்படுகிறது. உறவினர்