பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களும் வாழ்க்கை முறையும்

425


குடும்பங்களுக்குள்ளுங்கூட மாப்பிள்ளை வீட்டார்தாம் முதலில் பெண் கேட்பர். எவ்வளவு நெருக்கமான உறவாயிருந்தாலும் எங்கள் பெண்ணை உங்கள் பிள்ளைக்குக் கட்டிக் கொள்ளுங்கள் என்று பெண் வீட்டாராகக் கேட்கமாட்டார்கள். முதலில் மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டாலும் உடனே பெண் வீட்டார் ஒப்புதல் கொடுத்துவிட மாட்டார்கள் பொய்யாகவாவது ஒரு ‘பிகுவு’ காட்டிப் பிறகே பெண் தருவதாக உடன் படுவார்கள். இந்த நிலைமை கால்நூற்றாண்டுக்கு முன்பு வரையுங்கூட இந்தப் பகுதியில் கட்டுக் குலையாமல் இருந்தது. இப்போதும் பலரிடத்தில் இருக்கிறது. ஆனால், செல்வராக உள்ள ஒரு சிலர் படித்த மாப்பிள்ளை தேடித் தாமாகப் பெண்கொடுக்கப் போகும் வழக்கம் இப்போது சில்லாண்டுகளாகத் தோன்றிவருகிறது.

மாப்பிள்ளைக்குப் பணமும் (வரதட்சணை) கொடுத்துப் பெண்ணையும் அளிக்கும் ‘கன்னிகாதான முறை’ இந்நாட்டு மக்களிடம் இல்லை. அதற்கு மாறாக பெண்ணுக்குப் பரியப் பணம் கொடுத்துக் கட்டிக் கொள்வதே இந்நாட்டு வழக்கம். வரதட்சினை கொடுக்கும் இனத்தார்களிடையே, மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் தரவேண்டும் - பத்தாயிரம் தரவேண்டும் என்று பேரம் நடப்பதுபோல், இங்கே பெண்ணுக்குப் பரியப் பணம் கொடுக்கும் இனத்தார்களுள் ஐயாயிரம் - பத்தாயிரம் என்ற பேச்சு அடிபடாது; இருநூறு - முந்நூறு - ஏறினால் ஐந்நூறு - இந்த அளவில்தான் பேச்சு நடக்கும். மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் பத்தாயிரம் கேட்பது பணக்காரர் ஆவதற்காக! ஆனால், பெண்ணுக்கு இருநூறு - முந்நூறு கேட்பது வெறுந்திருமணச் செலவிற்காகத்தான்! மற்றும், ‘முலைப்பால்கூலி’ என்னும் பெயரில் தாய்வீட்டார் பெண்ணுக்கென ஏதேனும் வாங்குவது ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது.

இந்நாட்டுப் பெருங்குடி மக்களுள்ளும் பெண்ணுக்குப் பரியப் பணம் கேட்கும் வழக்கம் இப்போது குறைந்து வருகிறது. முன்பெல்லாம் பரியம் (பரிசப்பணம்) எவ்வளவு கொடுத்தார்கள் என்று கேட்பது வழக்கம். இப்போது அவ்வாறு கேட்பதில்லை. பெரும் பணம் கொடுத்து மாப்பிள்ளை தேடும் பெருநோய் இன்று இம்மக்களிடத்தும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. பெண்ணுக்கோ ஆணுக்கோ பணம் கொடுக்கும் மாட்டுச் சந்தை பேரம் இப்போது அரச ஆணைக்கு அஞ்சி மறைமுகமாக நடப்பதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பெண் வீட்டார் எவ்வளவு பெருஞ் செல்வராயினும் திருமணம்