பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

கெடிலக்கரை நாகரிகம்


மாப்பிள்ளை வீட்டில்தான் நடைபெறும். பெண் வீட்டில் திருமண்ம் நடைபெறுவது இருதரத்தார்க்கும் இழிவு எனக் கருதப்பட்டது. இப்போது இந்த முறையும் மாறி வருகிறது. மாப்பிள்ளை வீட்டார் சிலர், மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று ‘கட்டிக் கொடுக்கத்’ தொடங்கி விட்டனர்; மாப்பிள்ளைகள் சிலர் பெண் வீட்டிற்குச் சென்று ‘வாழ்க்கைப்படத்’ தொடங்கிவிட்டனர்.

இப் பகுதியில் அம்மான் மக்கள் - அத்தை மக்களுக்குள் திருமணம் நடைபெறும். மணமகன் தன் தமக்கை (அக்காள்) மகளைக் கட்டிக்கொள்ளும் வழக்கமும் உண்டு; தங்கை மகளைக் கட்டுவதில்லை. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தாய்மாமன் (அம்மான்) மிகவும் இன்றியமையாதவர். தொடக்கத்திலிருந்து இறுதிவரை அம்மானைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது. அம்மான் தன் மகனுக்குப் பெண் கேட்டால் கொடுத்தாகவேண்டும். அவர் கேட்கும் நிலையில் இல்லையென்றால்தான் வேறிடத்தில் பெண் கொடுக்கலாம் அம்மான் விருப்பப்படி நடக்காவிட்டால் அவர் மிஞ்சுவார்; பிறகு அவரைக் கெஞ்சவேண்டும். பரிய விழாவிலோ திருமண விழாவிலோ அம்மான்தான் வரிசை எடுத்து வைக்கவேண்டும். அன்பளிப்பிலும் அம்மானது அன்பளிப்புதான் முதலில் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு முன்பு சர்வாதிகாரிகள் ஆக இருந்துவந்த அம்மான்கள் இப்போது ‘சனநாயகவாதிகள்’ ஆக மாற்றப்பட்டு வருகிறார்கள்; அந்தோ அளியர்!

முன்பு உறவினருக்குள் திருமணம் மிகுதியாக நடைபெற்று வந்தது. இப்போது வெளியாருக்குள் மிகுதியாக நடை பெறுகிறது. தலைச்சன் பெண்ணுக்கும் தலைச்சன் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படி நடந்தால் வளர்ச்சி இல்லையாம். கடையும் கடையும் கட்டினாலும் கடைத்தேறாதாம். கடையும் தலையும் கட்டினால் கடலாக வாழுமாம் அஃதாவது, மணமக்கள் இருவருள், யாராவது ஒருவர் கடைசிப் பிள்ளையாகவும், மற்றொருவர் தலைப் பிள்ளையாகவும் இருந்தால் குடும்பம் நன்கு செழிக்குமாம். பிள்ளையைவிடப் பெண்ணுக்கு ஒரீராண்டு வயது குறையாயிருந்தால் போதாது; ஐந்து அல்லது ஆறு ஆண்டு வயது வேறுபாடாவது இருக்கவேண்டும். ஒரீராண்டு வயது குறைவான பெண்ணைக் கட்டிவைத்தால், கிழவியைக் கட்டி வைத்துவிட்டதாகக் கூறுவார்கள். பெண்ணுக்கு இருபது வயது ஆகிவிட்டாலோ - பிள்ளைக்கு முப்பது வயது ஆகிவிட்டாலோ கிழவி கிழவன் என்று முன்பு கிண்டல் செய்தார்கள். இப்போது