பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

427


அப்படியில்லை. உண்மையாகவே கிழவன் - கிழவிகளுக்குள் திருமணம் நடைபெறுகிறது. பண்டைக் காலத்தில் கூட, தமிழ்ப் பெருங்குடி மக்களிடையே குழந்தைத் திருமணம் நடைபெற்றதில்லை:

திருமணம் தொடர்பாக மூன்றுவகை நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண் முடிவானதும் பிள்ளைவீட்டாரும் பெண்வீட்டாரும் ஊரார் ஒரு சிலரும் சேர்ந்து பெண் வீட்டில் ‘தாம்பூலம் மாற்றுதல்’ என்னும் நிகழ்ச்சி நடத்துவர். பெண் அமர்த்தியாயிற்று என்பதை அறிவிக்கும் முதல் விழா இது. பின்னர்ச் சின்னாட் கழித்து, உற்றார் உறவின் முறையார் ஊரார் பலரும் அறிய விரிவான முறையில் ‘பரியம் போடுதல்’ என்னும் நிகழ்ச்சி பெண் வீட்டில் நடைபெறும். நிச்சயதார்த்தம், திருமண உறுதி என்றெல்லாம் சொல்வது இந்த இரண்டாவது விழாவினைத்தான். இறுதியாக, மணமகன் இல்லத்தில் திருமணவிழா நடைபெறும்.

திருமணம் தை, சித்திரை, வைகாசி, ஆணி, ஆவணி ஆகிய ஐந்து திங்கள்களிலேயே நடைபெறும். தெலுங்கர் புரட்டாசியிலும் நடத்துவர். இப்போது எல்லா இனத்தவரிலுமே ஒரு சிலர் எல்லாத் திங்கள்களிலும் திருமணம் நடத்தத் தொடங்கிவிட்டனர். பழைமை விரும்பிகள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. திருமண வீட்டார், ஊரார் - உறவினர்க்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் வைத்துத் திருமணத்திற்கு அழைப்பர். கொண்டான் கொடுத்தார்கட்குச் (சம்பந்திகட்கு) சிறப்புத் தாம்பூலம் வைக்க வேண்டும். இதற்குச் ‘சம்பந்தி தாம்பூலம்’ என்பது பெயர்.

திருமணப் பந்தல் போடுவதற்காக நல்ல நாள் பார்த்துக் ‘கால் நடுதல்’ என்னும் நிகழ்ச்சி நடத்துவர். திருமங்கலிகள் ஐவர் கூடிக் கால்நடுவர். பின்னர் வீட்டிலும் வெளியிலும் பந்தல் போடப்படும். பந்தல் முகப்பில் குலை உடைய வாழைமரங்கள், தென்னங்குலைகள், ஓலை - இலைக் கொடிகள் முதலிய மங்கலப் பொருள்கள் கட்டப்படும். தரையில் புதுமணல் பரப்பப்பெறும். திருமண முதல்நாள் மாலை, பெண்வீட்டார் பெண்ணை அழைத்து வந்து சேர்வர். ஊர்க் கோயிலிலோ, அல்லது பிள்ளை வீட்டாருக்கு வழக்கமாக ஆகிவந்த ஓரிடத்திலோ பெண்ணைத் தங்கச் செய்வர். பிள்ளை வீட்டார் வரிசையுடன் சென்று பெண்ணையும் பெண் வீட்டாரையும் வரவேற்பர். அப்போது நீர்மோர், பானகம் (வெல்லத் தண்ணிர்) முதலியன வழங்குதல் மரபு. பின்னர் மணப்பெண் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுப் பிள்ளை வீட்டை அஃதாவது திருமண