பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428

கெடிலக்கரை நாகரிகம்


வீட்டை அடைவாள். பெண் முதல் முதலில் வீட்டு வாயிற்படியில் வலக்காலை வைத்து ஏற வேண்டும். அப்போது நாத்திமார்கள் (மாப்பிள்ளையுடன் பிறந்த பெண்கள்) பெண்ணின் வாயில் சர்க்கரை கொட்டுவர். வீட்டிற்குள் சென்றதும், பெண்ணையும் பிள்ளையையும் ஒருசேர வைத்துக் கொண்டு ‘தாலி படைத்தல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பெறும்; அஃதாவது மாங்கலியத்தை இறையுருவத்தின் முன் வைத்து, வடை, சர்க்கரைப் பொங்கல் முதலியன செய்து படைப்பர். தாலி ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒவ்வொரு விதமாக இருக்கும்.

திருமணம் விடிவதற்கு முன் வைகறையிலோ அல்லது விடிந்தபின் முற்பகலிலோ குறிப்பிட்ட நல்ல நேரத்தில் நடைபெறும். நண்பகலிலோ, மாலையிலோ திருமணம் நடைபெறுவது இப் பகுதியில் வழக்கம் இல்லை. திருமணத்தில் பெண்ணுக்குப் பெண் தோழியும், பிள்ளைக்கு மாப்பிள்ளைத் தோழனும் துணையாக இருப்பர்; இந்தத் தோழன் - தோழியர், மைத்துன மைத்துனி முறையுடையவராயிருப்பர். தாலி கட்டும்போது கெட்டிமேளம் கொட்டப்பெறும்; மங்கல அரிசி போட்டு வாழ்த்தப்பெறும். தாலி கட்டியதும், அம்மான்கள், மாமிமார்கள், நாத்திமார்கள் ஆகிய பட்டாளங்களால் பெண்ணின் நெற்றியில் பல்வகைப் பட்டங்கள் கட்டப்பெறும். மணமக்கள் திருமண அரங்கைச் சுற்றி வரும்போது மணமகளின் உடன்பிறந்தாள் முன்னால் மங்கல விளக்கு ஏந்திச் செல்வாள். உற்றார் உறவினர் முதலியோர் மணமக்கட்கு அன்பளிப்பு வழங்குவர். அம்மான் அன்பளிப்பு முதலில் நடைபெற வேண்டும். பின்னர்க் கொண்டான் கொடுத்தான் சம்பந்திகளுள் முதல் சம்பந்தி, இரண்டாம் சம்பந்தி வாரியாக அன்பளிப்பு நடைபெறும். இந்த முறையில் தப்பித் தவறி ஏதேனும் மாறுதல் ஏற்பட்டுவிட்டால் திருமண அரங்கம் பெரிய போர்க்களமாக மாறிவிடும். கடைக்குட்டிப் பிள்ளையின் திருமணமாயின் விருந்தில் கடலை போடப்படும். மாலையில் ‘காப்புக் களைதல்’ என்னும் சடங்கு நடைபெறும். அப்போது மணமகளின் உடன் பிறந்தாள் மங்கல விளக்கு ஏந்துவாள்.

புது சம்பந்திகள் முதல்முதலாக வியாழக்கிழமையில் கை நனைக்க (விருந்துண்ண) மாட்டார்கள். ‘சம்பந்தங் கொண்டாடுதல்’ என்னும் சடங்கு நிகழ்த்திய பின்னரே ஒருவர் வீட்டில் இன்னொருவர் உணவு கொள்வர். திருமண நாளின் மாலையிலோ அல்லது மறுநாளோ பெண்வீட்டார் மணமக்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருவூட்டுவர்; இதற்கு ‘மாப்பிள்ளை மருவுண்ணுதல்’ என்பது