பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

429


பெயர். பின்னர்ச் சின்னாட் கழித்துப் பிள்ளை வீட்டார் மணமக்களைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து மருவூட்டுவர். இதற்குப் ‘பெண் மருவுண்ணுதல்’ என்பது பெயர். மணமக்களை அழைக்கும் போது நடக்கும் சடங்கிற்கு ‘அம்போகம் செய்தல்’ என்பது பெயர்.

மாப்பிள்ளை வீட்டில் பெண் மருவுண்டு அம்போகம் செய்தபின், பெண் வீட்டார் பெண்ணை மட்டும் தனியே தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். புதன்கிழமையில் மட்டும் மாப்பிள்ளையை விட்டுப் பிரித்துப் பெண்ணைத் தனியே அழைத்துச் செல்லமாட்டார்கள். ‘புதன் கால் பிரியக்கூடாது’ என்பது நம்பிக்கை. இந்த அம்போகச் சடங்குகளைத் திருமணமான திங்களிலேயே (மாதத்திலேயே) நடத்திவிடுவர்; மறுதிங்கள் வரையும் இழுத்துக் கொண்டு போகமாட்டார்கள். ஏனெனில், ‘இரட்டிப்பு மாதத்தில் எதுவும் செய்யக்கூடாது’ என்பது கொள்கை. திங்கள் இறுதியில் திருமணம் நடந்தால், தள்ள முடியாமல் வேறு வழியின்றி இரட்டிப்பு மாதத்தில் அம்போகம் செய்வதும் உண்டு. பெண்வீட்டார் பெண்ணைத் தனியே அழைத்துச் சென்று சின்னாட்கள் வைத்திருந்த பின்னர் மாப்பிள்ளை வீட்டார் சென்று அழைத்து வருவர். அதிலிருந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டாரின் உரிமையாகிவிடுகிறாள்.

பெண் வீட்டார் முதல் ஒரீராண்டுக்குப் பொங்கலின் போதும் தீபாவளியின் போதும் வரிசை வைத்து மண மக்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். இதற்குப் ‘பொங்கல் வரிசை’ - ‘தீபாவளி வரிசை’ என்று பெயராம். சிலர் ஆடித் திங்களில் ‘ஆடி வரிசை’ வைப்பதும் உண்டு. முதல் பிள்ளை பிறக்கும் வரையிலும் பெண்ணை ஆடித் திங்கள்களில் கணவன் வீட்டில் விட்டு வைக்கமாட்டார்கள். சிலர் மார்கழித் திங்கள்களிலும் விட்டு வைப்பதில்லை. ஆடியில் கரு ஏற்படின் சித்திரையிலும், மார்கழியில் கரு ஏற்படின் புரட்டாசியிலும் குழந்தை பிறக்கும்; ஆனால் சித்திரையிலும் புரட்டாசியிலும் தலைச்சன் குழந்தை பிறக்கக் கூடாது என்ற நம்பிக்கையிருக்கிறது; எனவே, ஆடியிலும் மார்கழியிலும் பெண்ணைப் பிள்ளை வீட்டில் பெரியவர்கள் விட்டு வைப்பதில்லை. ஆனால் சில குடும்பங்களில் பெரியவர்களுக்குத் தெரியாமல் ஆடியில் கரு ஏற்பட்டுவிடுகிறது; அதற்குப் பெரியவர்கள் என்ன செய்ய முடியும்!

ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன் இந்த நாட்டில் இப்போது உள்ள ‘புரோகிதத் திருமண முறை’ இல்லை. இஃது