பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

431


அழிந்தாலும் - எது அழிந்தாலும் இவற்றிற்கு அழிவேயில்லை போலும் பிணங்களை இடும் (புதைக்கும்) காடு இடுகாடு; சுடும் (எரிக்கும்) காடு சுடுகாடு. இந்த இடுகாடு - சுடுகாடுகள் ஆறு உள்ள ஊர்களில் ஆற்றங்கரையிலும், மற்ற ஊர்களில் ஊர் கடந்த எல்லையில் ஓர் ஒதுக்கிடத்திலும் உள்ளன.

திருமுனைப்பாடி நாட்டில் பெரும்பாலான மக்கள் பிணங்களைச் சுடவே செய்கின்றனர். கழுத்தில் இலிங்கம் கட்டிக் கொண்டிருக்கும் இலிங்கதாரிகள் எனப்படும் வீர சைவர்கள் பிணத்தைப் புதைக்கின்றனர். இவர்கள் அமர்ந்த நிலையிலேயே புதைக்கின்றனர். சுடுபவர்கள் சுட்ட மறுநாளே பால் தெளிக்கும் சடங்கு நடத்துகின்றனர். இடுபவர்கள் (புதைப்பவர்கள்) மூன்றாம் நாள் அஃதாவது புதைத்த மறுநாளுக்கு மறுநாள் ‘பால் தெளி’ நடத்துகின்றனர்; இதற்கு ‘மூன்றாங் கிரியை’ என்று பெயர் சொல்லப்படுகிறது. எட்டாம் நாள் துக்கம் கொண்டாடும் நிகழ்ச்சியொன்று நடைபெறும்; இதில் உறவினர்கள் உணவுப் பொருள்கள் கொண்டு வந்து வைத்துப் படைப்பார்கள்; இதற்கு ‘எட்டாம் துக்கம்’ என்பது பெயர். சுடுபவர்கள் பதினாறாம் நாள் இறுதிச்சடங்கு நடத்துவார்கள், இதற்குப் பதினாறாம் கிரியை, காரியம், கருமாதி, கல்லெடுப்பு என்றெல்லாம் பெயர் கூறுகின்றனர். இந்த இறுதிச் சடங்கு, வழக்கமாக இதற்கென ஊரில் உள்ள ஒரு தோப்பிலோ அல்லது மண்டபத்திலோ நடைபெறும். அங்கே, இறந்தவர் சார்பில் கல்நட்டுச் சடங்கு செய்வர். இதனால்தான் இதற்குக் ‘கல்லெடுப்பு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. முற்காலத்தில் போரில் இறந்த மறவர்கட்குக் கல்நடுவது வழக்கம்; இது ‘நடுகல்’ - ‘வீரக்கல்’ என்று சொல்லப்படும். இந்தப் பழக்கம் போரில் இறவாதவர்களுக்காவும் பின்னர் ஏற்பட்டு விட்டது. அதுதான் இன்று ‘கல்லெடுப்பு’ என்னும் பெயரில் நடைபெறுகிறது.

புதைப்பவர்கள் பதினோராம் நாள் வீட்டிலேயே சடங்கு நடத்துகின்றனர். இதற்குப் ‘பதினோராம் கிரியை’, ‘மோட்ச தீபாராதனை’ என்றெல்லாம் பெயர் சொல்வர், இருவகையினருமே இறுதி நாளுக்கு முன்னாள் இரவு ‘நடப்பு’ என்னும் ஒருவகைச் சடங்கு நடத்துவர், இரவு முழுதும் விட்டு விட்டு சாமத்திற்குச் சாமம் செத்த இடத்தில் படைத்துப் பெண்கள் அழுவார்கள். கணவன் இறந்திருந்தால் மனைவிக்குத் ‘தாலி வாங்குதல்’ என்னும் சடங்கு நிகழ்த்துவர். அஃதாவது, அவளிடமிருந்து தாலியை அகற்றி விடுவர். அது முதற்கொண்டு அவள் பொட்டு, பூ, மஞ்சள் முதலிய மங்கலப் பொருள்களை