பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432

கெடிலக்கரை நாகரிகம்


ஏற்றுக் கொள்ளமாட்டாள். அவளுக்குக் கைம்பெண், விதவை, அமங்கலி என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்படும் அந்தோ!

செத்த பிணத்தைக் குளிப்பாட்டிக் கோடி போர்த்தி எடுத்துச் செல்வர். பெண்கள் இறந்தால் தாய் வீட்டார் கோடி போர்த்துவர். செத்த பெண்ணின் கைகளில் வெற்றிலை பாக்கு வைத்து அவற்றைக் கணவன் அவளிடமிருந்து வாங்கிக் கொள்வது போன்ற பொருளில் எடுத்துக் கொள்ளச் செய்வர். கணவன் அடுத்த திருமணம் செய்து கொள்வதற்கு வழிவகுத்துக் கொடுத்ததாக இதற்குப் பொருளாம். பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், கணவன் தம்பியாகிய கொழுந்தன், பிணம் எடுக்கும்போது அண்ணிக்குக் கோடி போடுவான். தாலி வாங்கும்போது தாய் வீட்டார், பெண்ணிற்குக் கோடி போடுவர் கோடி போடுதல் என்றால் கழுத்தில் கோடிப் புடவை போடுதலாம். தாயோ, தந்தையோ இறந்தால், இறுதிச் சடங்கின் போது சம்பந்திமார்கள் பிள்ளைகட்குக் கோடித் துணிகள் கொண்டுவந்து கொடுத்துத் தலையில் பாகையாகக் கட்டிக் கொள்ளச் செய்வர். இதற்குத் ‘தலை கட்டுதல்’ என்று பெயராம். இடுப்பில் கட்டிக் கொள்வதற்கும் கோடு கொடுப்பர். தலைகட்டிய மறுநாள் சாவு வீட்டாரும் சம்பந்திமார்களும் சேர்ந்து கொண்டு எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிச் சிறப்புணவு கொள்வர்; இதற்குக் கசப்புத் தலை முழுக்கு என்று பெயராம். செத்த முப்பதாம் நாளிலும் ஒருவகைச் சடங்கு நடைபெறுவதுண்டு; இதற்கு முப்பதாங்கிரியை என்பது பெயர். சாவுத் தொடர்பான ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் செத்த இடத்தில் செத்தவரின் துணிமணிகளை வைத்தும், உணவுப் பொருள்கள் வைத்தும் படைத்து, பெண்கள் குழுக் குழுவாகக் கட்டிக் கொண்டும் மாரடித்துக் கொண்டும் ஒப்பாரிப் பாட்டுப் பாடி ஓயாமல் அழுவார்கள்.

பெண்கள் வெள்ளிக்கிழமையில் இறந்தாலும் அல்லது வெள்ளிக்கிழமையில் பிணம் எடுத்துக் கொண்டு போனாலும் அப்பெண்களுடன் திருமகளும் (செல்வமும்) போய் விடுவதாகச் சொல்லி மக்கள் வருந்துவர். அவிட்டநாளில் (நட்சத்திரத்தில்) பிணம் எடுக்கமாட்டார்கள்; தள்ள முடியாமல் அவிட்டத்தில் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பிணம் கிடந்த இடத்திற்கு நேர் மேலே வீட்டுக் கூரையைப் பிரித்துப் போட்டு விட்டுப் பிறகே எடுத்துச் செல்வர். அவிட்டத்தில் பிணம் எடுத்தால் ஆவி இங்கேயே சுற்றிக் கொண்டிருக்குமாம்; மேல் கூரையைப் பிரித்துவிட்டால் ஆவி அந்தக் கூரை வெளி வழியாகப் போய்விடுமாம். இப்படியொரு