பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

433


நம்பிக்கை. மற்றும், பிணத்தை வீட்டிற்குள்ளிருந்து மூன்று வாயிற்படிகள் தாண்டி வெளியில் எடுத்துக் கொண்டு வரக்கூடாதாம், திருமுனைப்பாடி நாட்டு வீடுகளிலோ தெருநடைப் பகுதியிலேயே இரண்டு வாயிற்படிகள் இருக்கும். அதனால், நோயாளி அறையில் படுத்திருந்தால் உயிர் போகும் தறுவாயில் அறையை விட்டு வெளியே எடுத்து வந்து தாழ்வாரத்தில் கிடத்தி விடுவர். அறையிலேயே இறந்துவிடின் அறை வாயிற்படியையும் சேர்த்து மூன்று வாயிற்படிகள் ஆகிவிடும் அல்லவா? அதனால் அறைக்கு வெளியில் எடுத்துவந்து விடுவர். பிணத்தை எமகண்டம், குளிகம் ஆகிய காலங்களில் சுடலைக்கு எடுத்துச் செல்லமாட்டார்கள். இராகு காலம் இதற்குக் கணக்கில்லையாம்.

பெரியவர்கள் இறந்துவிடின், பிணத்தின் முன்னே தேங்காய் பழம் வைத்துச் சூடம் கொளுத்திப் படைத்து எல்லாரும் கீழே விழுந்து வணங்குவர். இதற்காக, சாவது உறுதி என்று தெரியத் தொடங்கியதுமே தேங்காய் - பழம் - சூடம் ஆயத்தம் செய்யத் தொடங்கிவிடுவர். சிலர் தம் சாவு நெருங்கிக் கொண்டிருக்கும் போதே, எதிரில் உள்ள குடும்பத்தார்களை நோக்கி, “தேங்காய் பழம் - சூடம் எல்லாம் ஆயத்தமாய் வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டுக் கொண்டே சாவதும் உண்டு. ஆகா! சாகும்போதும் தம் குடும்பத்தார்க்கு அறிவுரை கூறி உதவி ஒத்துழைப்புச் செய்துகொண்டே சாகும் குடும்பச் சமுதாய அமைப்பை என்னென்று கூறி வியந்து பாராட்டுவது!

சிறு குழந்தைகள் இறந்தால் எல்லா இனத்தவருமே எரிக்காமல் புதைக்கின்றனர். ஆனால், தலைச்சன் குழந்தை இறந்துவிடின் எரித்துவிடுவர். அதைப் புதைத்தால், மந்திரவாதிகளும் சூனியக்காரரும் தோண்டி எடுத்துத் தம் மாய மந்திரச் சூனிய வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வராம். அப்படி அவர்கள் செய்துவிடின், பிறகு பெற்றோர்கட்கு அடுத்த குழந்தைகள் பிறக்கமாட்டாவாம். தள்ளமுடியாமல் தலைச்சன் குழந்தையைப் புதைக்க வேண்டிய கட்டாய நெருக்கடிச் சூழ்நிலை ஏற்படின், குழந்தையின் தலைமயிரிலும் நகங்களிலும் ஒரு சிறிது வெட்டி எடுத்துக் கொண்டே புதைப்பர். இவ்வாறு செய்துவிடின், பிறகு மந்திரவாதிகள் தோண்டினாலும் ஒன்றும் கைகூடாதாம் (பலிக்காதாம்).

சனிக்கிழமையில் ஒருவர் இறந்துவிடின், அடுத்த சனிக்குள் ஊரில் இன்னொருவர் இறந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது; ‘சனிப் பிணம் துணை தேடும்’ என்பது முதுமொழி.

கெ.28