பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

435


எழுந்தது இதனால்தான். ஒரு சிலர் கிருத்திகை (கார்த்திகை) நாளிலும் பகலில் சோறு ஆக்கிப் படைத்து உண்பர். இப்போது சிறுவர்கள் பேதி மருந்து உட்கொள்ளப் பின் வாங்குகின்றனரே - முன்பு பேதி மருந்து உட்கொள்வதென்றால் மகிழ்ச்சியாம்; ஏனெனில், பேதிக்கை மருந்து உட்கொண்டால் பகலில் கூழ் கிடைக்காமல் சோறு கிடைக்குமாம்.

சோறு உண்பவர்கள் வெறு நாட்களில், கீரை, ஒரு குழம்பு, இரசம், மோர் இவற்றுள் ஒன்றிரண்டைச் சோற்றுடன் சேர்த்துக் கொள்வர். கிருத்திகை அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில், ஒரு கீரை அல்லது ஒரு கூட்டு அல்லது இரண்டும், ஒரு பொரியல் அல்லது ஒரு வறுவல் அல்லது இரண்டும், ஒரு குழம்பும், ஓர் இரசமும் மோரும் சோற்றுடன் சேர்த்து உண்கின்றனர். சிறப்பு நாட்களில் இவற்றுடன் சர்க்கரைப் பொங்கல், வடை, அப்பளம், பாயசம் முதலியனவும் சேர்த்துக் கொள்வர். கூட்டு ‘கூட்டுக்கறி’ என்றும், பயறு இடாத குழம்பு ‘குழம்பு’ என்றும், பயறு இட்ட சாம்பார் ‘பருப்புக் குழம்பு’ என்றும் இங்கே அழைக்கப்படுகின்றன. இரசம் என்பது முன் காலத்தில் ‘மிளகுத் தண்ணீர்’ என்று அழைக்கப்பட்டது; இப்பெயர் இன்று மொளத் தண்ணி’ எனக் கொச்சையாகக் கூறப்படுகிறது.

இப்போது கூழ் குடிப்பவர் தொகை குறைவு. ஏழைகளும் தொழிலாளிகளுங்கூட இருவேளைகளிலும் சோறு உண்ணவும், காலையும் மாலையும் சிற்றுண்டியும் தேநீரும் உட்கொள்ளவும் தொடங்கிவிட்டனர். நகர்ப் புறத்தில் இந்த நிலையே இன்று உள்ளது. நாட்டுப் புறங்களில் மட்டும் சிலரிடையே கூழ் இன்றும் நடமாடுகிறது.

இப்பகுதியிலுள்ளவர்களுள் பெரும்பாலானவர் புலால் புசிப்பவர்களே வேளாளர், இலிங்கதாரிகள், ரெட்டியார், சேடர் போன்ற சில இனத்தவர்கள் புலால் உண்ணுவதில்லை; இந்தக் காலத்தில் இவர்களுள்ளும் சிலர் உண்கின்றனர். எந்தக் காலத்திலுமே எல்லா இனங்களிலுமே, வழிவழியாகப் புலால் உண்ணாத குடும்பங்கள் ஒரு சில இருந்து வரத்தான் செய்கின்றன.

உடை

இப்பகுதியில் கால் நூற்றாண்டு முன்பு வரையும் உடை முறைகள் வருமாறு:

பெண்கள் எங்கும் உள்ளவாறு புடைவையும் கச்சு என்னும் இரவிக்கையும் உடுப்பர். ஆண்கள் கீழேவேட்டி உடுத்து மேலே