பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436

கெடிலக்கரை நாகரிகம்


துண்டு போர்த்திக் கொள்வர். கஞ்சுகம் எனப்படும் சட்டை மேலே போட்டுக் கொள்வதில்லை. சிறப்பு நாட்களிலும் குளிர்காலத்திலும் மட்டுமே சட்டை அணிவர்; மற்ற நாட்களில் சட்டையைச் சட்டை செய்யார். ஒரு சிலர் எந்த நாளிலுமே சட்டை அணியாமல், மேலே துண்டு மட்டும் போர்த்திக் கொள்வர். மேலே சட்டை போட்டுக் கொள்பவரும் சட்டைக்கு மேல் கழுத்தில் துண்டும் போட்டுக் கொள்வர். சட்டைக்கு மேல் துண்டு போடாமல் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு வெளியே செல்வது மிகவும் இழிவாக மதிக்கப்படும். மேலே சட்டையில்லாதிருப்பது இழிவன்று; துண்டு இல்லாமலிருப்பதே இழிவு. சிலர் கறுப்புத் துணியோ கறுப்புக் கோடு இட்ட துணியோ உடுத்தார்.

இளைஞரும் நடுத்தர வயதினரும் கீழே துணியைச் சுற்றினாற்போல் உடுப்பர். பெரியவர்கள் கீழே துணியைக் ‘கீழ்ப் பாய்ச்சு’ கட்டிக் கொண்டு, தலையில் ‘மண்டாச்சி’ அல்லது ‘முண்டாசு’ என்னும் தலைப்பாகை கட்டிக் கொள்வர். பெரியவர்கள் வெற்று நாட்களில் எப்படியிருப்பினும், சிறப்பு நாட்களில் கீழ்ப் பாய்ச்சும் தலைப்பாகையும் கட்டாயம் கொள்வர். மணமகனும் தலையில் பாகை அணிந்து கொள்வான். பெரியவர்கள் சிறப்பு நாட்களில் கீழே துணி உடுத்திருப்பதல்லாமல், அத் துணிக்கு மேல் இடுப்பைச் சுற்றிக் கச்சு போல் ஒரு துண்டும் கட்டிக் கொள்வர்; அதே போல் மேலே போர்த்திய துணிக்கு மேல் ஒரு நீளத் துண்டு போட்டுத் தொங்க விட்டிருப்பர். சிறப்பு நாட்களில் கீழும் மேலும் பட்டும் சரிகைத் துணியும் உடுப்பர். இவையெல்லாம் பழைய முறைகள். இன்று எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

உறைவிடம்

நகர்ப் புறங்களில் கல்வீடுகள் இருக்கும். கல்வீடுகளிலும் ஓட்டு வீடுகளே மிகுதி, மாடி வீடுகள் குறைவு. சிற்றுார்களில் கூரை வீடுகளே மிகுதி, கல்விடுகள் குறைவு; கல்வீட்டிலும் மாடி வீடுகள் மிக மிகக் குறைவு. கூறை வீடுகள் தென்னங்கீற்று, பனையோலை மட்டை, வைக்கோல், கம்பந்தட்டு, சோளத்தட்டு, கருப்பஞ் சோலை, விழல் முதலியவற்றால் வேயப்பட்டிருக்கும். கூரை வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு அறைகளைத் தவிர வேறொன்றும் இரா. ஒரு சில கூரை வீடுகளில் ஓர் அறைகூட இராது. ஒரு சில கூரை வீடுகள் கல்வீடு மாதிரி இருக்கும் - அஃதாவது, மேலே மட்டும் ஓடு இல்லாமல் கூரை இருக்கும்; கீழே கல்வீட்டில் உள்ள எல்லா வசதிகளும் இருக்கும்; இத்தகைய வீடுகட்குத் ‘தூல பத்தி வீடு’ என்பது பெயர்.