பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

437



உலகில் உரைவிடங்களின் அமைப்பில் இடத்திற்கு இடம், வேறுபாடு இருக்கக் காண்கிறோம். தமிழகத்திற்குள்ளேயே இடத்திற்கு இடம் வேறுபாடு உள்ளது. எனவே, திருமுனை பாடி நாட்டிலுள்ள கல் வீட்டின் அமைப்பு வருமாறு:-

வீட்டின் முகப்பில் வீடு கொண்ட அகலத்திற்கு உயரமான குறடு இருக்கும். தெருவிலிருந்து குறட்டிற்குப் படி இருக்கும். குறடு ஏறிக் கடந்ததும் வாயிற்படிக்கு முன்னால் இரு பக்கங்களிலும் திண்ணை இருக்கும். வாயிற்படிக்குள் நுழைந்ததும் நடை இருக்கும்; நடை என்பது, இரண்டு பக்கம் வழி கொண்ட ஓர் அறை போன்ற அமைப்பு உடையது. நடையைக் கடந்து உள்ளே சென்றதும் நான்கு பக்கங்களிலும் தாழ்வாரம் இருக்கும். நான்கு தாழ்வாரங்கட்கும் நடுவில் திறந்த வெளிவாசல் இருக்கும். சிலர் வாசலைத் திறந்தபடி விடாமல் மேலே கூண்டுபோல் கட்டி மூடிவிடுவதும் உண்டு; இதற்குக் ‘கல்யாணக் கூண்டு’ என்று பெயர் சொல்லப்படுகிறது. நான்கு தாழ்வாரங்களுள் ஒரு தாழ்வாரத்தை அடுத்துக் கூடம் இருக்கும். கூடம் என்பது தாழ்வாரத்தினும் ஓரளவு அகலமாகவும் உயரமாகவும் இருக்கும் அமைப்பாகும். தெற்கு நோக்கிய வீட்டிலும் வடக்கு நோக்கிய வீட்டிலும் மேற்குப் புறத் தாழ்வாரத்திற்கு மேற்பகுதியில் கூடம் இருக்கும். கிழக்கு நோக்கிய வீட்டிலும் மேற்கு நோக்கிய வீட்டிலும் வடபுறத் தாழ்வாரத்தின் வடபகுதியில் கூடம் இருக்கும்.

சில வீடுகளில் கூடம் இருக்காது; நான்கு தாழ்வாரங்கள் மட்டுமே இருக்கும். சிலவற்றில் கூடமும் இன்றி மூன்று தாழ்வாரங்கள் மட்டுமே இருக்கும். சிலவற்றில் மூன்று தாழ்வாரங்களும் கூடமும் இருக்கும். மூன்று தாழ்வாரங்கள் உள்ள வீட்டில் ஒரு நடையும் ஓர் அறையும், நான்கு தாழ்வாரங்கள் உள்ள வீட்டில் ஒரு நடையும் இரண்டு அறைகளும், கூடமும் உள்ள வீட்டில் இவற்றுடன் கூடுதலாக ஓர் அறையும் தெருப் பக்கத்தில் இருக்கும். அறையில் பலகணி உண்டு. பல வீடுகள் முன் கட்டோடு இருக்கும்; நகர வீடுகளில் பின்கட்டும் இருக்கும். வசதியானவர் வீடுகளில் மூன்று கட்டுகள் இருப்பதும் உண்டு. மாடி வீடுகளில் சிலவற்றில் இரண்டு அடுக்குகள் இருக்கும். மூன்று அடுக்குகளைக் காண்பது அரிது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் தோட்டம் இருக்கும். தோட்டத்தில் கிணறும் மரஞ்செடி கொடிகளும் இருக்கும்.

வடக்குப் பார்த்த வீட்டினும் தெற்குப் பார்த்த வீடும், மேற்குப் பார்த்த வீட்டினும் கிழக்குப் பார்த்த வீடும் வசதியானவையாகக் கருதப்படுகின்றன. தெருவாயிற்படிக்கு நேரே தோட்டம் வரையும் தடுப்புச் சுவர் இன்றித் திறப்பு