பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

439



தமிழ்ப் புத்தாண்டு

இது சித்திரைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடப் பெறும். வைகறையில் எழுந்து இல்ல முழுதும் தூய்மை செய்து, மஞ்சள் குங்குமத்தாலும் மாவிலையும் வேப்பிலையும் கலந்த புதிய இலைக் கொடியாலும் (தோரணத்தாலும்) வீட்டு வாயிற்படிகள் அனைத்தையும் அணி செய்வர். நண்பகலில் பல்வகைக் காய்கறி உணவுகளையும் சிற்றுண்டி வகைகளையும் இறைவனுக்குப் படைத்து உண்பர். அறுசுவை உண்டியும் இருக்கும். புத்தாண்டு நாளில் மகிழ்ச்சியுடன் இருந்தால் ஆண்டு முழுதும் மகிழ்ச்சி நிலவுமாம். இந்த நாளில் துன்புற்றால் ஆண்டு முழுதும் துன்பந்தானாம். அதனால் இந்த நாளில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளார்; சிறுவர்களை வைதலோ அடித்தலோ செய்யார். எதுவாயிருப்பினும் ‘நாளைக்குப் பார்த்துக் கொள்கிறேன்’ என்பர். ‘ஒருவர் பிறந்த கிழமையில் புத்தாண்டு பிறந்தால், அவருக்கு அந்த ஆண்டு நன்றாயிராது’ என்ற நம்பிக்கை இப்பகுதியில் இருக்கிறது.

பிள்ளையார் சதுர்த்தி

ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் வழக்கமான துப்புரவுகளுடன் இது தொடங்கப்பெறும். களிமண் பிள்ளையார் செய்யப்படுவார்; அல்லது விலைக்கு வாங்கி வரப்படுவார். பிள்ளைகள் தும்பைப் பூ வில்வம், வன்னி இலை, நாவல்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கம்பங்கதிர், சோளக்கதிர் முதலியன கொய்து வருவர்; இலவசமாகக் கிடைக்காத இடங்களில் விலைக்கு வாங்கப்படும். பிள்ளையாரை முறைப்படி திருமுழுக்காட்டி அணிசெய்து, பலவகைப் பழவகைகள், காய்கறி வகைகள், சிற்றுண்டி வகைகள் வைத்துப் படைப்பர். சுண்டலும் கொழுக்கட்டையும் இன்றியமையாதவை. மறுநாளும் அதற்கு மறுநாளும் ஏதேனும் வைத்துப் படைப்பர். மூன்றாம் நாள் பிள்ளையாரைக் கொண்டு போய் ஏதேனும் ஒரு நீர்நிலையில் விட்டுவிட்டு வந்து விடுவர். பிள்ளையாரின் தொப்பையில் பதிக்கப்பட்டிருக்கும் காசு, கொண்டு போய் நீரில் விடும் சிறார்களைச் சேரும்.

கலைமகள் விழா

புரட்டாசியில் நடைபெறும் இதனை ஆயுதபூசை என்பர். ஒன்பது நாள் நவராத்திரிக் கொண்டாட்டம் பெரும்பாலான இனத்தவர்களின் இல்லங்களில் நடைபெறுவதில்லை. தமிழ் மக்களின் இல்லங்களில் ஒன்பதாம் நாளான வளர்பிறை