பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440

கெடிலக்கரை நாகரிகம்


நவமியில் மட்டுமே இது கொண்டாடப்படும். எல்லா வகைக் கருவிகளையும், பெட்டி பேழை - குதிர் முதலியவற்றையும் தூய்மை செய்து பூசை போட்டுப் பொட்டும் இடுவர். மாணாக்கர்கள் தங்கள் நூல்கள், எழுதுகோல்கள் முதலியவற்றிற்கும் பூசை போட்டுப் பொட்டிடுவர். எல்லாவற்றையும் நடுவிட்டில் இறையுருவத்தின் முன் கொலுவாக வைப்பர். அவல், சுண்டல், காய்கறி - சிற்றுண்டி வகைகள் வைத்துப் படைப்பர். எல்லாவற்றினும் அவல் - கடலை இன்றியமையாத பொருளாம். இவ்விழா தொழிற் கூடங்களிலும் வணிக நிலையங்களிலுங்கூட நடைபெறும். எங்கு நடைபெறினும், தென்னை ஓலை, மாவிலை முதலியவற்றாலான இலைக் கொடிகள் அணிசெய்து கொண்டிருக்கும். கொலுவில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் கொலு கலைக்காமல் யாரும் எடுக்கக்கூடாது. அன்று மாலையோ, அல்லது மறுநாள் அஃதாவது பத்தாம் நாளான விசயதசமியன்றோ மறுபடையல் படைத்துக் கொலுவைக் கலைப்பர்; பின்னரே பொருள்கள் எடுத்துப் பயன்படுத்தப்படும். இந்தப் பெருநாட் காலத்தில் சிறார்களைப் புதிதாய்ப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது உண்டு.

தீபாவளிப் பெருநாள்

ஐப்பசியில் அமாவாசைக்கு முந்தின சதுர்த்தசி நாள் இரவில் இது கொண்டாடப் பெறும். இரவு முழுதும் பெண்கள் கண் விழித்துத் தின்பண்ட சிற்றுண்டி வகைகள் செய்வர். பிள்ளைகள் பல்வேறு வகை வெடிகள் வெடித்தும் வாணங்கள் கொளுத்தியும் மகிழ்வர். வைகறையில் அனைவரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவர். பின் உணவு வகைகளும் புதிய உடை வகைகளும் வைத்துப் படைப்பர். சில குடும்பங்களில் பெண்கள் கோயிலுக்குச் சென்று நோன்பு எடுத்துக் கொண்டு வந்து பின்பு வீட்டில் படைப்பர். படைத்ததும் புத்தாடை உடுத்து, உணவு வகைகளை உண்டு மகிழ்வர். மகளைக் கட்டிக் கொடுத்த முதல் தீபாவளியாயின், மகளும் மருமகனும் வந்து தலைத் தீபாவளி மருவுண்பர். உறவினர்களும் நண்பர்களும் ஒருவர்க்கொருவர் உணவு வகைகளை வழங்கிக் கொள்வர்; ஏழை எளியவர்க்கும் அளிப்பர்.

கார்த்திகைப் பெருநாள்

இது கார்த்திகைத் திங்களில் கார்த்திகை (கிருத்திகை) நாளில் நடைபெறும். நண்பகலில் கடவுளுக்குச் சிறப்பாகப் படைத்து உண்பர். சில குடும்பத்தார் பகல் முழுதும்