பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442

கெடிலக்கரை நாகரிகம்



பொங்கல் பெருநாள்

தைத் திங்களின் தொடக்கத்தில் நடைபெறும் இது, தமிழ் நாட்டின் தனிப்பெரும் பெருநாள் விழாவாகும். மார்கழித் திங்களின் இறுதி நாளில் ‘போகிப் பண்டிகை’ என்பது நடைபெறும். அன்றைய வைகறையிருளிலே தேவையற்ற பழம் பொருள்கள் எரிக்கப்படும். இதற்குப் ‘போகி மூட்டம்’ என்று பெயர் கூறப்படுகிறது. இந்த எரிப்பு விழா நாளடைவில் வளர்ச்சி பெற்று, தேவையற்ற பழம் பொருள்களுடன்,தேவைப் பயனுள்ள விறகுக் கட்டைகள், பெரிய மரத் துண்டங்கள் முதலியவற்றையெல்லாம் போட்டு எரித்து வேடிக்கை பார்த்து அதிலொரு வகை இன்பங் காணும் நிலைக்கு வந்துவிட்டது. போகியன்று காலையில் வீடு முழுதும் பெரிய அளவில் துப்புரவு செய்யப்படும். போகிப் பெருநாள் ஒரு சில குடும்பங்களிலேயே விரிவாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படும் இல்லங்களில் காலையில் கூழ் படைத்து ஏழை எளியவர்க்கு ஊற்றப்படும். இதனைப் ‘போகிக் கூழ்’ என்றும் ‘கூழ் ஊற்றுதல்’ என்றும் குறிப்பிடுவர். அன்று இரவு சிறப்பான உணவுப் பொருள்களுடன் படைத்து உண்பர். இந்தப் படையலிலும், முன்சொன்ன நாட்டுக் கார்த்திகைப் படையல் போலவே சைவப் படையல், காத்தவராயன் புலால் படையல் என இருவகை உண்டு.

மறுநாள் - அஃதாவது தைத்திங்கள் முதல் நாள் பெரும் பொங்கல் விழா கொண்டாடப் பெறும். வீட்டிற்கு நடுவேயுள்ள திறந்த வெளிவாசலில் புதுப்பானைகள் வைத்துப் பச்சரிசிச் சோறு பொங்கியும், புதுச் சட்டிகள் வைத்துக் குழம்பு - காய்கறிகள் முதலியன செய்தும், அந்த நடுவாசலிலேயே குடும்பப் பழக்கத்திற்கு ஏற்றபடி ஐந்து இலைகளோ அல்லது இருபத்தோர் இலைகளோ போட்டுப் பரிமாறிக் கதிரவனுக்குப். (சூரியனுக்குப்) படைப்பர். படைக்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவிப் படைப்பர். இத்தனை பானைகள் வைப்பது இத்தனை படி அரிசி பொங்குவது என்றெல்லாம் குடும்பத்திற்கு ஏற்றபடி மாறுதல் இருக்கும். சிலர் சர்க்கரைப் பொங்கலும் செய்வர். கரும்பு, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு முதலியவை இந்தப் படையலுக்கு இன்றியமையாதவையாகும். சில குடும்பத்தினர் உணவு வகைகளைப் பூசணி இலையில் இட்டுப் படைப்பர். பொங்கல் இடும் பழக்கம் இல்லாத நெருங்கிய உறவினர்க்கும் நண்பர்க்கும் தொழிலாளர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவு வழங்கப்படும். இந்தப் படையலுக்குப் பெரும் பொங்கல்