444
கெடிலக்கரை நாகரிகம்
கொள்வது. சில ஊர்களில் கோயிலில் திருவிழா நடைபெறும். வயதானவர்கள் பல வேடிக்கைப் பேச்சுகள் பேசி மகிழ்வர். இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தெருக்களில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவர். சில ஊர்களில் குடைராட்டினம் அமைத்து ஏறிச் சுற்றி விளையாடுவர். கலைஞர்கள் கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல், நாடகம் முதலிய பல வகையான கேளிக்கைகள் நடத்துவர். பல்வேறு தொழிலாளர்களும் கலைஞர்களும் அன்று வீடுதோறும் சென்று பரிசு பெறுவர். அன்றிலிருந்து ஊரிலுள்ள எல்லாவகைத் தொழிலாளர்கட்கும் கலைஞர்கட்கும் தொடர்ந்து சில நாள்கள் விடுமுறை இருக்கும். பின்னர் ஒரு நாள் வேலை தொடங்க வேண்டிய நாளாக ஊர்ப் பெருமக்களால் குறிப்பிடப் பெறும். அன்று தான் எல்லாரும் தத்தம் தொழில்களைச் செய்யத் தொடங்கலாம். அன்று கடவுளுக்குப் படைத்து வேலை தொடங்குவர். இதற்கு ‘நாள் கொள்ளுதல்’ என்று பெயராம். நாள் கொள்வதற்குமுன் எவரேனும் வேலை தொடங்கினால் அது பொதுக் குற்றமாகக் கருதப்படும். சலவைத் தொழிலாளர் நாள்கொண்டு வேலை தொடங்குவதற்குத் ‘துறை கும்பிடுதல்’ என்று பெயராம். அவர்கள் நீர்த்துறையில் பூசைபோட்டு வேலை தொடங்குவர்.
ஐந்தாம் நாள் சில ஊர்களில் ஆற்றுத் திருவிழா நடைபெறும். தை அமாவாசையன்று கடல் முழுக்கு நடைபெறும். தைத் திங்களில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை ‘தலை ஞாயிறு’ என்னும் பெயரில் சில குடும்பத்தினரால் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். அன்றும் பொங்கலிட்டுக் கதிரவனுக்குப் படைப்பர். சிலர் தலை ஞாயிறு நாளைக் ‘கன்று குட்டிப் பொங்கல்’ என்னும் பெயரிட்டுக் கொண்டாடுகின்றனர். அன்று கன்றுகளைக் குளிப்பாட்டி அணிசெய்து பொங்கல் படைத்து ஊட்டுவர். சிலர் அன்று கூழ் படைத்து ஏழையர்க்கு ஊற்றுவர்; அன்றிரவு சிறப்பு உணவு வகைகளுடன் படையலும் நடைபெறும்.
சில இனத்தார்களுள் - சில குடும்பங்களில் தைத்திங்கள் எட்டாம் நாள் ‘மயிலார்’ என்னும் நோன்பு பெண்களால் நோற்கப்படும். பெண்கள் காலையிலிருந்து உண்ணா நோன்பிருந்து மாலையில் படைத்து உண்பர். படைக்கும் இடத்தில் மயில் இற்கு வைக்கப்படும். பெண்கள் படைக்கும் போது ஆடவர் அங்கு இருந்து அதைப் பார்க்கக்கூடாது; அந்த நேரத்தில் ஆடவர் வீட்டினின்றும் வெளியேறிவிடுவர். அன்று மட்டும் முதலில் பெண்கள் உண்பர்; பின்னரே ஆடவர் உண்பர்.