பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

445


பெண்கள் சிலர் மயிலார் நோன்பு நாளில் தரையைத் தூய்மை செய்து உணவைத் தரையில் வைத்து உண்ணுவர் எனச் சொல்லப்படுகிறது.

தைத் திங்கட் பூச நாளில் ஊர்களில் விழா கொண்டாடப்படுவதன்றிச் சில குடும்பங்களிலும் சிறப்புக் கொண்டாட்டம் நடைபெறும். நிரம்ப உணவு வகைகள் செய்து இறைவனுக்குப் படைத்து உற்றார் உறவினர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவளிப்பர். இதற்குப் பூச பாவாடை என்பது பெயர். சில குடும்பங்களில் இரவோ டிரவாக உணவு ஆக்கி விடிவதற்குள் படைத்துவிடுவர். சில ஊர்களில் கோயிலில் ‘பூச பாவாடை’ போட்டு ஊரார் அனைவரும் கலந்து உண்பர்.

இப்படியாகத் தைத் திங்களில் பொங்கலையடுத்துப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு பொங்கல் விழா பலநாள் நடப்பதையும், தொழிலாளர் விடுமுறை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட ஒரு நாளில் நாள் கொள்ளுவதையும், முதல் ஞாயிறு தலை ஞாயிறாகக் கருதப்படுவதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயுங்கால், தைத்திங்கள் முதல் நாள் ஒரு காலத்தில் தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கமாக இருந்திருக்கக்கூடும் என்பதும், தமிழ்மக்கள் பொங்கல் விழாவைத் தமிழ்த் தேசீய விழாவாகக் கொண்டாடி வந்தனர் என்பதும் உய்த்துணரப்படுகின்றன.

நோன்புகள் (விரதங்கள்)

இப் பகுதியில் பலவகையான நோன்புகள் பின்பற்றப் படுகின்றன. நோன்பு விரதம் எனப்படுகின்றது; ஒரு பொழுதே (ஒரு வேளையே) உண்பதால் ‘ஒரு பொழுது’ என்றும் சொல்லப்படுகிறது. ஆடித் திங்களில் வெள்ளிக் கிழமை தோறும் அம்மனுக்காகப் பெண்கள் சிலரும், புரட்டாசித் திங்களில் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்காகச் சிலரும், புரட்டாசித் திங்களிலேயே வளர்பிளை சதுர்த்தசியில் ‘அனந்த விரதம்’ என்னும் நோன்புப் பெயரில் சிலரும், ஐப்பசித் திங்களில் அமாவாசை கழித்த ஆறுநாள் ‘கந்தர் சஷ்டி விரதம்’ என்னும் பெயரில் சிலரும் கார்த்திகைத் திங்களில் திங்கட் கிழமை தோறும் ‘சோமவார விரதம்’ என்னும் பெயரில் சிவபெருமானுக்காகச் சிலரும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி என்னும் பெயரில் சிலரும், மாசியில் ‘சிவராத்திரி’ என்னும் பெயரில் சிலரும், பங்குனியில் உத்திரம்’ என்னும் பெயரில் சிலரும், திங்கள் தோறுமே கார்த்திகை, பூசம் -