பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450

கெடிலக்கரை நாகரிகம்


வைத்துப் படுத்தால் வயதுக் குறைவாம். தேங்காய் உடைத்தால் இரண்டு மூளிகள் சரியாய் உடைய வேண்டும். கோயிலுக்குச் சென்றால் காசு, உணவுப்பொருள் ஆகியவற்றை மீதி பண்ணி எடுத்து வரக்கூடாது சுடலையிலிருந்து எந்தப் பொருளையுமே எடுத்து வரக்கூடாது. ஊருக்குப் போன எட்டாம் நாள் - அஃதாவது அதே கிழமையில் திரும்பக் கூடாது.

சில பழக்க வழக்கங்கள்

நாடோறும் பெண்கள் வைகறையில் எழுந்து தெருவாயிற் படியில் சாணநீர் தெளித்து, அலகிட்டுத் தூய்மை செய்து கோலம் போடுவர். அதன் பின்னரே வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்வர். நடு இரவில் இரண்டு மணிக்கு யாரேனும் ஊருக்குப் புறப்பட்டாலும் அதற்கு முன் தெருவில் சாணம் தெளித்தே அனுப்புவர். இரவலர் (பிச்சைக்காரர்கள்) வந்தால் கூடிய வரைக்கும் ‘இல்லை’யென்று சொல்லாது ஏதேனும் இட்டு அனுப்புவர். இடுவதற்கு வாய்ப்பு வசதி இல்லையாயினும். ‘இல்லை’ என்னும் சொல்லைச் சொல்லாமல், ‘போய் வா’, ‘இன்னோர் இடம் போய்ப் பாரு’, ‘நேரம் ஆய்விட்டது’, ‘நேரம் ஆகும், என்றெல்லாம் ஏதேனும் சொல்லியனுப்புவர். விருந்தினர் வந்தால், தாம் எவ்வளவு ஏழையராயினும் வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, கை கால் தூய்மை செய்யத் தண்ணிர் கொடுப்பர்; வந்தவர் கை கால் தூய்மை செய்த பின்னரே, இடப்பட்டுள்ள இருக்கையிலோ அல்லது விரிப்பிலோ அமர்வர். உடனே ஒரு தட்டில் வெற்றிலை பாக்க கொண்டுவந்து வைப்பர். பின்னர் அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவந்து தருவர்.

சிலர் நாடோறும் கதிரவனை வணங்கியே உண்பர்; சிலர் கருடனைக் கண்ட பிறகே உண்பர்; சிலர் உண்பதற்கு முன் காகத்திற்கு உணவு வைத்துப் பின்னரே உண்பர். எல்லோருமே பகலில் கடவுளுக்குப் படைக்கும் நாளில், படைத்தபின் காகத்திற்கு உணவு வைத்துவிட்டுத்தான் உண்பர். சனிக்கிழமையில் பெருமாளுக்குப் படைப்பவர்கள் கருடனைக் கண்ட பிறகே உண்பர்.

மாலை வேளையில் - பொழுது சாயும் நேரத்தில் பெண்கள் தெரு வாயிற்படியிலும் குறட்டிலும் தண்ணீர் தெளித்துத் தூய்மை செய்து கோலம் போட்ட பின் விளக்கு ஏற்றி வைப்பர். நாடோறும் தெருவாயிற்படியில் முன்னிரவு வரையும், ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மின்சார விளக்கு இருந்தாலும், பழைய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒன்று