பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

451


ஏற்றித் தெருவாயிற்படியில் கொண்டுபோய் வைப்பர். விளக்கு வைப்பதற்கென்றே தெருத் திண்ணைக்கு மேலே மாடமோ அல்லது ஒரு கட்டையோ இருக்கும். தெருவில் விளக்கு வைத்த பின்னரே வீடு முழுதும் விளக்கேற்றுவர். தெருவில் விளக்கு அணைந்து விட்டால் அணைந்த விளக்கை வறிதே எடுத்துக்கொண்டு உள்ளே வரமாட்டார்கள். தெருவிலே ஏற்றி எடுத்துக் கொண்டுதான் உள்ளே வருவர். அணைந்த விளக்கை எடுத்து வந்தால் திருமகள் தெருவோடு போய்விடுவாளாம். வெளியில் எங்கேயாவது விளக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்றால், வீட்டிற்குள்ளே ஏற்றாமல், தெருவிலே வந்துதான் விளக்கை ஏற்றிக் கொண்டு எடுத்துச் செல்வர். வீட்டிற்குள்ளேயும் விளக்கைத் தானாக அணைய விடமாட்டார்கள்; அணைந்தாலும் இன்னொரு முறை ஏற்றியே அணைப்பர்.

மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் யாரும் சோம்பல் முரிக்கக்கூடாது; படுக்கக்கூடாது; காலை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கக்கூடாது; கெட்ட பேச்சுகள் பேசக்கூடாது. விளக்கு ஏற்றும்போது அங்கிருப்பவர்கள் கையெடுத்துக் கும்பிடுவர்; ஏற்றியவர்களும் கும்பிடுவர்.

“மாடும் கன்றும் வரும்வேளை
மஞ்சள்தண்ணீர் சுற்றும்
வேளை காலை மடக்கடி காமாட்சி
கையை முடக்கடி மீனாட்சி

என்பது வட்டார வழக்குப் பாடல். மாலை நேரம் என்பது, மாடும் கன்றும் மந்தையிலிருந்து வரும் நேரமாகும் - பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீர் சுற்றும் நேரமாகும். விளக்கு வைக்கும் நேரமும் அதுவேயாகும் - அந்த நேரத்தில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது; மடக்க வேண்டும் கையை மடக்கிக் கும்பிட வேண்டும் - என்பது இந்தப் பாடலின் கருத்து.

குழந்தை தும்மினால் ‘நூறு’ என்று சொல்லி அஃதாவது, நூறு ஆண்டு வாழவேண்டும் என்றபொருளில் சொல்லி மக்கள் வாழ்த்துவர்; குழந்தை இரண்டாவது தும்மல் தும்மினால் ‘இருநூறு’ என்று சொல்லி வாழ்த்துவர். பல்லி ஒலியெழுப்பினால், கையை நொடித்துச் சிட்டிகை கொட்டுவர் அல்லது, தரையைத் தட்டுவர். கொட்டாவி விடினும் கையை நொடிப்பர். இடி இடித்தால் ‘அர்ச்சுனா அர்ச்சுனா - கிருஷ்ணா அர்ச்சுனா’ என்பர்.