பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454

கெடிலக்கரை நாகரிகம்



எல்லாம் - அல்லாம்
சாப்பிட்டு - சாட்டு
எழுந்திருந்து - ஏன்ழ்சி

வட்டார வழக்குகள்

ஒருவரது பேச்ச வழக்கைக் கொண்டு அவர் இன்ன மாவட்டத்தினர் என ஏறத்தாழக் கூறிவிடலாம். இவ்வாறு கூறுவதற்குப் பரந்த அளவில் பட்டறிவு (அனுபவம்) வேண்டும். இந்த முறையில், தென்னார்க்காடு மாவட்டத்தினரை அடையாளம் காட்டிக் கொடுக்கும் சில பேச்சு வழக்காறுகள் உள்ளன. பிற மாவட்டத்தினர் சிலர் தென்னார்க்காடு மாவட்டத்தினரை ‘வந்துகினு - போய்க்கினு’ எனக் கேலி செய்வது உண்டு. ‘வந்துகொண்டு’, ‘போய்க் கொண்டு’ என்னும் சொற்களைத் தஞ்சாவூர் மாவட்டத்தினர் ‘வந்துகிட்டு’, ‘போய்க்கிட்டு’ எனச் சொல்லுவர்; தென்னார்க்காடு மாவட்டத்தினர் ‘வந்துகினு’ ‘போய்க்கினு’ என்பர். ‘‘ரும்போது - போம்போது’ என்பதை ‘வர சொல்ல போ சொல்ல’ என்று வடார்க்காடு மாவட்டத்தினர் கூறுவர். இதையே தென்னார்க்காடு மாவட்டத்தினர் ‘வரக்குளே போக்குளே’ என்றும், வரப்போ - போரப்போ’ என்றும் கூறுகின்றனர். அதன் பிறகு என்னும் பொருளில் சென்னைப் பக்கத்தில் ‘அப்பாலே’ என்பர்; திருநெல்வேலிப் பக்கத்தில் பெறவே என்பர்; தென்னார்க்காடு மாவட்டத்தில் ‘அப்புறம்’ என்பர்; சிலர் அப்புறம் என்பதை ‘அம்பறம்’ எனப் பிழைபட ஒலிப்பர். இப்படியாகப் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் - சிறப்பாகத் திருமுனைப்பாடி நாட்டில் பேச்சு வழக்கில் சில மாறுதல்கள் உள்ளன. அவற்றுள் மேலும் சில வருமாறு:

தந்தையை அப்பா என்று அழைப்பதல்லாமல் ‘அண்ணன்’ என்றும் சிலர் அழைப்பர்; சிற்றப்பாவைச் சின்னண்ணன் என்பர்; பெரியப்பாவைப் பெரியண்ணன் என்பர்; தெலுங்கரே யன்றித் தமிழருள்ளும் சிலர் தந்தையை நாயனா என அழைக்கின்றனர். சின்னம்மாவைச் சிலர் சின்னம்மா என்றும், சிலர் சித்தி என்றும், சிலர் சின்னாயி என்றும் அழைப்பர். பெரியம்மாவைச் சிலர் பெரியாயி என்பர். அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இடைப்பட்டவரை நடப்பா என்றும், அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் இடைப்பட்ட அம்மாவை ‘நடம்மா’ என்றும் அழைப்பர். அண்ணனை ‘அண்ணாத்தை’ என்பர் சிலர். தமக்கையைப் பெரும்பாலார் ‘அக்கா’ என்பர்; ஒரு சிலர் ‘ஆச்சி’ என்றும், மற்றும் ஒருசிலர் ‘அப்தா’ என்றும் அழைப்பர். தம்பி தம்பியேதான். தங்கையைப் படர்க்கையில் ‘தங்கச்சி’ என்றும், முன்னிலையில் ‘பாப்பா’ என்றும்