பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. வரலாறு கண்ட திசைமாற்றம்

எந்த ஆறும், தோன்றும் இடத்திலிருந்து முடியும் இடம் வரைக்கும் பல இடங்களில் வளைந்து வளைந்து திரும்பித் திரும்பிப் பல திசைமாற்றங்களைப் பெறுவது இயல்பு. கெடிலமும் இதற்கு விதிவிலக்கன்று, பல இடங்களில் நெளிந்து வளைந்து பல திருப்பங்களைப் பெற்றுள்ளது. பெரும்பாலும் ஆறுகளின் வளைவான திசைமாற்றம் சிறிது சிறிதாகத்தான் நிகழ்ந்து கொண்டுபோகும். அதாவது, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஓர் ஆறு, திடீரென ஓர் இடத்தில் இந்தக் கோணத்தில் வடக்கு நோக்கித் திரும்புவது அரிது. கிழக்கு நோக்கி ஓடிவரும் ஆறு வடக்கு நோக்கி வளைந்து திரும்பி யிருக்கிறதென்றால், அந்தத் திருப்பம் செங்கோணத்தில் இல்லாமல், குடையின் கைப்பிடிபோல் சிறிது சிறிதாக வளைந்தே ஏற்பட்டிருக்கும். ஆனால், கெடிலமோ, தன் பயணத்தின் இறுதியில் ஓரிடத்தில் _ இதுபோல் செங்கோணமாக வளைந்துள்ளது. இதனால், ஒரு வரலாற்று உண்மையும், இலக்கிய உண்மையும் தவறுபட வழி ஏற்படுகிறது. எனவே, அந்த வரலாறு நிகழ்ந்த பின்னரே இந்தச் செங்கோணத் திருப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தெளியவேண்டும். இதுபற்றிய சுவையான விவரம் வருமாறு:

திருவதிகைப் பக்கத்திலிருந்து கிழக்கு நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் கெடிலம், திருவயிந்திரபுரம் வந்ததும் திடீரென இந்தச் செங்கோணத்தில் வடக்கு நோக்கித் திரும்புகிறது. இந்தத் திருப்பத்திற்குக் காரணம் கேப்பர் மலையின் (கேப்பர் மலைப் பீடபூமியின்) அமைப்புதான். திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து திருவயிந்திரபுரம் வழியாகக் கடலூரை நோக்கி மேற்கும் கிழக்குமாக நீண்டு கிடக்கும் கேப்பர் மலையில், திருவயிந்திரபுரத்தையொட்டி ஒரு பிதுக்கம் காணப்படுகிறது. அதாவது, கேப்பர் மலையிலிருந்து ஒரு சிறு குன்று வடக்கு நோக்கிப் பிதுங்கிக் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டுள்ளது. கெடிலம் ஆறு, திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கேப்பர் மலை அடிவாரத்தையொட்டியே ஓடிவந்து கொண்டிருக்கிறது. வழியில் திருவயிந்திரபுரத்தில், கேப்பர் மலையிலிருந்து வடக்கு நோக்கிப் பிதுங்கி நீட்டிக் கொண்டிருக்கும் சிறுகுன்றுப் பகுதி தடுப்பதால், கெடிலம்