பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488

கெடிலக்கரை நாகரிகம்


பட்ட தமிழ்க் கல்லூரி மிகவும் குறிப்பிடத்தக்கது. இதனாலும் இம்மாவட்டத்திற்குப் பெருமை மிக உண்டு. இன்று தமிழகத்தில் பத்திற்கு மேற்பட்ட தமிழ்க் கல்லூரிகள் உள்ளன. இவற்றுள், திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியும், அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் பழைமையானவை; மூன்றாம் இடம் மயிலம் தமிழ்க் கல்லூரிக்கு உரியது.

பாடலிபுத்திரம்

இன்று கெடிலக்கரை நாட்டில் பல ஊர்களிலும் உயர்நிலைப் பள்ளிகள், பல்வகைத் தொழிற் பள்ளிகள் முதலியன நடைபெற்ற வருவது கண்கூடு. பண்டு இந்த நாட்டுப் பகுதியில் பாடலிபுத்திரம், பாகூர், எண்ணாயிரம் முதலிய ஊர்களில் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. திருப்பாதிரிப் புலியூரை அடுத்திருந்த பாடலிபுத்திரத்தில் பெரிய சமணசமய நிலையம் இருந்தது. இங்கே ஐந்தாம் நூற்றாண்டிலேயே சிம்மசூரி, சரவநந்தி முதலிய சமணத் தலைவர்கள் தங்கியிருந்து பல நூல்கள் இயற்றியுள்ளனர். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநாவுக்கரசர் தருமசேனர் என்னும் தலைமைப் பட்டப் பெயருடன் சமணத் தலைவராய் இங்கே வீற்றிருந்தார். அங்கே அருங்கலை நூல்கள் பல பயிலப்பட்ட செய்தியை,

[1]“அங்கவரும் அமண்சமயத்து அருங்கலை
நூலான வெலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே
அந்நெறியில் புலன்சிறப்ப”

என்னும் பெரியபுராணப் பாடற் பகுதியால் அறியலாம்.

பாகூர்

பாகூரில் ஒரு வடமொழிப் பல்கலைக் கழகம் எட்டாம் நூற்றாண்டிலேயே இருந்தது. இங்கேயே மாணவர்கள் உண்டும் உறைந்தும் கல்வி கற்றனர். ஒன்பதாம் நூற்றாண்டில் நிருபதுங்கவர்மப் பல்லவன் இந்தப் பல்கலைக் கழகத்திற்குச் சேத்துப்பாக்கம், விளங்காட்டங்காடவனுர், இறைப்புனச்சேரி என்னும் மூன்று ஊர்களை முற்றூட்டாக அளித்தான். இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தர்ம சாத்திரம், புராணம், ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தர்வம், அர்த்த சாத்திரம் ஆகிய பதினெட்டுப் பிரிவுகள் பயிற்றப்பட்டன.


  1. பெரியபுராணம் - திருநாவுக்கரசர் - 39.