பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி-கலைத்துறை

489



பாடலிபுத்திரம், பாகூர் முதலிய இடங்களில் இருந்த அமைப்புகளைக் கொண்டு, தமிழகத்தில் சங்ககாலத்தை யடுத்துச் சமண பெளத்த சமயங்களின் ஆட்சியும் வடமொழியின் ஆட்சியும் வேரூன்றி வளரத் தொடங்கிவிட்டன என அறியலாம். சமண பெளத்தமும் வடமொழியும் இங்கே வேரூன்றுவதற்குப் பல்லவர்கள் பெருந் துணைபுரிந்தனர். அவர்கள் வடமொழியை நன்கு வளர்த்தனர். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் பெரிய வடமொழிப் புலவனாகவும் திகழ்ந்தான்; அவன் இயற்றிய ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்னும் வடமொழி நாடகம் அக்காலத்தில் பெரிய விளம்பரம் பெற்றிருந்தது. பல்லவர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் ஓரளவு ஆதரவு அளித்து வந்தனர். பல்லவர் காலத்துக்கு முன்னும் பின்னும் சோழ பாண்டிய மன்னர்களால் தமிழ்மொழி பெரிய அளவில் வளர்க்கப்பட்டது. சோழ பாண்டிய மன்னர்களின் மேலாட்சியின் கீழ்த் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசர்களும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தனர். யார் என்ன செய்தும், தமிழுடன் வடமொழியும் வளர்ந்து கொண்டே வந்தது.

பள்ளிக்கூடங்கள்

பண்டைக்காலத்தில் பொதுப் பள்ளிகள் கோயில்களிலும் மடங்களிலும் நடைபெற்றன. சமண பெளத்தக் கோயில்களும் மடங்களும் ‘பள்ளி’ என்று அழைக்கப்பட்டன. அந்த இடங்களில் கல்விக் கூடம் நடைபெற்றபோது ‘பள்ளிக்கூடம்’ என அழைக்கப்பட்டது. அந்தப் பெயர் நின்று நிலைத்துவிட்டது. இத்தகைய பொதுப் பள்ளிகள் சமயச் சார்புடையன வாகவே இருந்தன. இவையேயன்றி, ஊர் தோறும் தனித்தனி ஆசிரியர்களால் அவரவர் இல்லங்களில் தனித்தனிப் பள்ளிகள் பல நடத்தப்பெற்று வந்தன. இவ்வகைப் பள்ளிகட்குத் திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம் என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்பட்டன. நாட்டில் இத்தகைய பள்ளிகளே மிக்கிருந்தன என்று சொல்லலாம். ஆசிரியர் ஒவ்வொருவரும் பல்கலைப் புலவராகத் திகழ்ந்தனர்; கணிதம், வானவியல், மருத்துவம் முதலிய கலைகளில் திறமை பெற்றிருந்தனர். மாணாக்கர்க்குப் பல்வகைக் கலைகளும் பயிற்றப்பட்டன.

ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கிய போது, தென்னார்க்காடு மாவட்டத்தில் உருப்படியான பழையமுறை நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தொள்ளாயிரத்துக்கும் (900) மேற்பட்ட எண்ணிக்கையில் நடைபெற்று வந்ததாகத் தாமஸ்