பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490

கெடிலக்கரை நாகரிகம்


மன்றோ குழுவினரால் கணக்கிடப்பட்டுள்ளது. மூலை முடுக்கு ஊர்களில் இருந்த இன்னும் எத்தனையோ பள்ளிகள் இந்தக் குழுவின் கணக்கிற்குள் அகப்படாமல் இருந்திருக்கலாம். பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை மிக்கிருந்தும், படித்தவர் விழுக்காடு 2.3% என்னும் அளவிலேயே இருந்தது. இதிலிருந்து, ஊர் தோறும் பள்ளிக்கூடம் இருந்தும், அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை; ஒரு சிலரே ஆசிரியரை அடுத்துக் கல்வி கற்றனர் - என்னும் உண்மை புலனாகிறது. அதனால் தான் இப்போது கட்டாயக் கல்விமுறை தேவைப்படுகிறது.

அறிஞர் பெருமக்கள்

திருமுனைப்பாடி நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை கல்வியின் தரம், கற்றவர் தகுதி, இலக்கியங்களின் அமைப்பு முதலியவை எப்படி இருந்தன என்று கணிப்பதற்கு, இந்த நூலிலுள்ள ‘கெடிலக்கரைப் பெருமக்கள்’, ‘கெடிலக்கரை இலக்கியங்கள்’ என்னும் இரண்டு தலைப்புகளும் பெருந்துணை புரியும். ‘கல்வி - கலைத்துறை’ என்னும் இந்தத் தலைப்பிற்குள் அந்த இரண்டு தலைப்புகளையும் அடக்கிக் கொள்ளவுஞ் செய்யலாம். கபிலர், பரணர், ஒளவையார், அம்மூவனார், கல்லாடனார், பேரிசாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார், கோவூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் முதலிய சங்க காலப் புலவர்கள் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ திருமுனைப்பாடி நாட்டில் பன்னாள் வாழ்ந்ததாலோ, திருமுனைப்பாடி நாட்டு மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றதாலோ இந்நாட்டோடு மிக்க தொடர்புடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுள் பெரும் புலவராய கபிலர் திருக்கோவலூரோடும் மலையமான் திருமுடிக்காரியோடும் கொண்டிருந்த தொடர்பு பெரிதும் குறிப்பிடத்தக்கது. அவர் வடக்கிலிருந்து தீயிட்டுக்கொண்டு உயிர் நீத்த இடமாகக் குறிப்பிடப்படும் கபிலர்குன்று திருகோவலூர்ப் பகுதியில் உள்ளது.

சங்கப் புலவாகளை அடுத்து, இடைக்காலத்தில் திருநாவுக்கரசர், சுந்தரர், தொல்காப்பியத்தேவர், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், வில்லி புத்தூரார், அருணகிரிநாதர், முதலிய பெருமக்கள் பிறந்து வளர்ந்ததாலும் நிலையாக நெடுங்காலம் வாழ்ந்ததாலும் திருமுனைப்பாடி நாட்டோடு மிகமிக நெருங்கிய தொடர்புடையவர்களாவார்கள். தேவார