பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி-கலைத்துறை

491


ஆசிரியர்கள் மூவருள் இருவரான நாவுக்கரசரும் சுந்தரரும் கெடிலக்கரை ஊர்களில் பிறந்து மிகப்பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்ததால் திருமுனைப்பாடிநாடு மிக்க பெருமைக்கு உரியது எனப் புலவர் பலராலும் பல நூல்களில் பாராட்டப் பெற்றிருப்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது.பாரதம் பாடிய வில்லிபுத்துரார் பிறந்த சனியூரும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்ததே. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பிறந்த திருவண்ணாமலையும் இந்நாட்டினதே. (முதலில் திருவண்ணாமலை வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே சேர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பெற்று வளர்ந்த திருவெண்ணெய் நல்லூர் சோழ நாட்டில் உள்ள ஊர் என்று சிலர் கூறினும், திருமுனைப்பாடி நாட்டில் உள்ள ஊர் என்று பலர் கூறுகின்றனர்; இஃது உண்மையானால், திருமுனைப்பாடி நாட்டின் கல்விப் பெருமைக்குக் கணக்கேயில்லை. இப்பெருமக்களே யன்றி, திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், பொய்கை யாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை யாழ்வார், சேக்கிழார், பட்டினத்தார் முதலியோரும் திருமுனைப்பாடி நாட்டுப் பதிகளை வணங்கிப் பாடி நாட்டிற்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.

பிற்காலத்தில் நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க வள்ளலார், இலக்கணம் சிதம்பரநாத முனிவர், ஈசானிய மடம் இராமலிங்கசாமி, திருவதிகை வாகீச பக்த நாவலர், திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப நாவலர், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார், திருப்பாதிரிப் புலியூர் சிவசிதம்பரப் புலவர், வண்டிப் பாளைம் இராசப்ப ஆசிரியர் முதலிய பெருமக்கள் பலர் இப் பகுதியில் வாழ்ந்து. சிறந்த நூல்கள் இயற்றியும், பலர்க்குப் பாடங் கற்பித்தும் தமிழ்மொழியை வளர்த்துள்ளனர். திருப்பாதிரிப் புலியூரில் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் வாழ்ந்த காலத்தில் ஞானியார் மடம் ஒரு பெரிய தமிழ்ப் பல்கலைக் கழகமாக விளங்கிற்று, மடத்தில் அடிகளாரிடத்தில் கல்வி கற்றுப் பெரும் புலவர்களாய் உயர்ந்தோர் மிகப் பலராவர். இன்னும் இந்த நூற்றாண்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல துறைக்கல்வி கற்றுப் பலர் பேரறிஞர்களாய்த் திகழ்வது வெளிப்படை.

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவுக்கரசர், சுந்தரர், மெய்கண்டார் முதலிய அருட்பெருங் குரவர்கள் பிறந்தும் வாழ்ந்தும் அரும்பெரும் படைப்புகளை அளித்துள்ளனரென்றால், இந்நாட்டில் அன்றிருந்த கல்விச் சூழ்நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! மாபெருஞ் சிறப்பிற்குரிய இலக்கியப் படைப்புகளேயன்றி, ஆயிரக்கணக்கான