பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

492

கெடிலக்கரை நாகரிகம்


கல்வெட்டுகளும் திருமுனைப்பாடி நாட்டில் அமையப் பெற்றிருப்பது நாட்டின் பழம் பெருஞ் சிறப்பிற்கு மேலும் தக்க சான்றாகும். செய்யுள் வடிவிலும் கல்வெட்டுகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை இந்நூலில் ‘கெடில நாட்டுக் கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பில் காணலாம்.

கலைகள்

இயல், இசை, கூத்து (நடனம்), ஒவியம், கட்டடம் முதலிய பொறியியல், சிற்பம் முதலிய கலைகள் திருமுனைப்பாடி நாட்டில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தன. பல்லவ மன்னர்களும் சோழ வேந்தர்களும் இக்கலைகட்குப் போதிய ஆதரவு அளித்து வந்தனர். இத்தனை கலைகளையும் திருக்கோயில்களில் காணலாம்.

இயல்

இயல் கலையாகிய இலக்கியத்திற்கு இந்நாட்டில் குறைவேயில்லை. மலையமான் மன்னர்களைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள், அப்பர் - சுந்தரரின் தேவாரங்கள், மெய்கண்டார் - அருணந்தி சிவாசாரியார் ஆகியோரின் சித்தாந்த சாத்திர முதன்மைத் தலைநூல்கள், வேதாந்த தேசிகரின் நூற்றிற்கு மேற்பட்ட வைணவப் பெருநூல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், வில்லிபுத்தூராரின் பாரதம், நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகளின் கற்பனைக் களஞ்சிய நூல்கள், வடலூர் வள்ளலாரின் அருட்பா முதலிய இயற் கலைப் படைப்புகள் திருமுனைப்பாடி நாடு தந்த செல்வங்களேயாம்.

இசை

பண்டு திருக்கோயில்களில் தமிழ்ப் பண்களின் முழக்கமே கேட்கப்பட்டது. தேவாரத் - திருப்புகழ்ப் பாடல்கள் தமிழிசைப் பண்களின் நிலைக்களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்தத் தேவார ஆசிரியர் மூவருள் இருவராய அப்பரும் சுந்தரரும், திருப்புகழ் ஆசிரியராகிய அருணகிரிநாதரும் பிறந்தது திருமுனைப்பாடி நாடுதான்! மற்றும், கெடிலக் கரையிலுள்ள பண்ணுருட்டி (பண் + உருட்டி) என்னும் ஊரின் பெயரும் இந்நாட்டு இசை வளர்ச்சிக்குச் சான்று பகரும்.

கூத்து

கூத்து என்னும் கலையில் நடனம் (ஆடல்), தெருக்கூத்து, நாடகம் முதலியவை அடங்கும். பாடல் பெற்ற பெரிய திருக் கோயில்கள் ஆடல் கலைக்கு நிலைக்களமாக இருந்தன. இதற்கென்றே கோயில்களில் ஆடல் மாதர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர்; அவர்கள் விழாக் காலங்களில் ஆடல் விருந்து