பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494

கெடிலக்கரை நாகரிகம்


சிதைக்கப்பட்டுப் பொலிவிழந்துள்ளன. இவையே யன்றி, திருவதிகைக் கோயிலிலும் ஆடல் மாதரின் சிற்பங்கள் உள்ளன. திருக்கோவலூர்ப் பெருமாள் கோயிலிலுள்ள பெண்டிர் கோலாட்ட நடனச் சிற்பம் மிகவும் கண்டு களிக்கத்தக்கது.

இவ்வாறு சிற்பிகள் கற்சிற்பங்களாக வடிக்கும் அளவிற்கு அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் ஆடற்கலை பெருவளர்ச்சி பெற்றிருந்தது. அடுத்து, அம்மன்கோயில், ஐயனார்கோயில் முதலிய சிறுகோயில்கள் தெருக்கூத்துக் கலையை வளர்த்தன.

இந்தக் கோயில்களில் விழா நடக்கும் நாள்களில் தெருக் கூத்துகள் நடத்தப்பெறும். கடலூர், திருக்கோவலூர் முதலிய இடங்களில் மிகப் புகழ் பெற்ற தெருக்கூத்துக் குழுவினர் உள்ளனர். இது போக, அரங்கங்களில் நாடகங்களும் நடிக்கப்பட்டன. திருநாவுக்கரசரின் வரலாற்றை மையமாகக் கொண்டு ‘பூம்புலியூர்’ என்னும் பெயருடைய நாடகம் ஒன்று இற்றைக்கு எண்ணுாறு ஆண்டுகட்கு முன்பே நடிக்கப் பட்டதாகத் தெரிகிறது. பூம்புலியூராகிய திருப்பாதிரிப் புலியூரில் ‘முத்தையா ஹால்’ என்னும் பெயருடைய நாடக அரங்கம் ஒன்று உள்ளது; கால் நூற்றாண்டுக்கு முன், இந்த அரங்கமே தமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய அரங்கம் என்று சொல்லப்பட்டது.