பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498

கெடிலக்கரை நாகரிகம்


அடியிலிருந்து முடிவரைக்கும் சுதையாலான உருவங்கள் கண்கட்குத் தெவிட்டா விருந்து அளித்துக் கொண்டிருக்கின்றன. விமானத்தின் உச்சி நிழல் நிலத்தில் விழாவாறு அடிப்படை அமைத்துக் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கெடிலநாட்டுச் சிற்பக்கலைச் செல்வத்திற்கு இன்னும் எத்தனையோ சான்றுகள் உள.

கைவினைப் பொருள்கள்

வரலாற்றுக் காலத்திற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் முற்பட்ட கற்காலம் (Stone Age), உலோக காலம் (Metal Age) ஆகிய காலங்களிலேயே கெடில நாட்டு மக்கள் கல்லாலும் இரும்பு முதலிய உலோகங்களாலும் கருவிகள் செய்து பயன்படுத்தி வாழ்ந்தனர். அத்தகு கருவிகள் நிலத்திலிருந்து கிடைத்துள்ளன - என்னும் செய்தி இந்நூலில் ‘கெடில நாட்டு வரலாறு’ என்னும் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு, கெடில நாட்டின் கைவினைக் கம்மியக் கலையின் சிறப்பை உய்த்துணரலாம்.

இவ்வாறு இன்னும் கணிதம், வானவியல், மருத்துவம், முதலிய பல்வேறு கல்வி - கலைத்துறைகளிலும் இந்நாடு நெடுநாளாய்ச் சிறப்புற்று வருகிறது.