பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை நாகரிகம்

501


வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டு:- எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம் முதலியன. இத்தகைய நாகரிகங்கள் நிலநடுக்கம், எரிமலை, நீண்ட வறட்சி, புயல், வெள்ளம், மண் மேடிடுதல், கடல்கோள் முதலிய இயற்கையின் சீற்றத்தாலும் மாற்றத்தாலும் அழிந்துபோவதுண்டு; மற்றும், அரசியல் போர் - பிணக்கு முதலியவற்றாலும், வேற்று அரசு - மொழி - சமயம் - நாகரிகம் முதலியவற்றின் இடையீட்டாலும் தலையீட்டாலும் மேலாட்சியாலும் குறிப்பிட்ட ஒரு நாகரிகம் மறைந்து போவதும் உண்டு. இன்ன பிற இடையூறுகளினின்றும் தப்பி நெடுநாளாய் நிலையாய் ஒரு நாகரிகம் இருக்கிறதென்றால் அது மிகவும் குறிப்பிடத்தக்கதாம். பொதுவாக இந்திய நாகரிகம், சிறப்பாகத் தமிழ் நாகரிகம் நெடுநாளாய் நின்று நிலைத்திருப்பதாகச் சொல்லலாம். கெடிலக் கரை நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே.

தமிழகத்தில் நடுநாடு என அழைக்கப்படும் திருமுனைப் பாடி நாட்டில் கெடிலம் ஆறு ஓடுகிறது. எனவே, கெடிலக்கரை நாகரிகத்தைத் தமிழகத்தின் நடுநாகரிகம் அஃதாவது பொது நாகரிகம் என ஒருவாறு கூறலாம். இந்தக் கெடிலக் கரை நாகரிகத்தின் தொடக்க காலத்தைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. வரலாற்றுக் காலத்திற்கு மிக முற்பட்டது இந்த நாகரிகம். இந்நூலில் ‘கெடிலத்தின் தொன்மை’ என்னும் தலைப்பில், ‘கெடிலம்’ ஆறு காலம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது” என்னும் உண்மை பல சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. மற்றும் இந்நூலில் ‘கெடில நாட்டு வரலாறு’ என்னும் தலைப்பில், ‘கெடிலம் பாயும் திருமுனைப்பாடி நாட்டில் கற்கருவிகளும் சவக்குழிகளும் முதுமக்கள் தாழிகளும் கிடைப்பதால், இந்நாடு கற்காலத்திற்கு முற்பட்ட பழம்பெருமை உடையது’ என்னும் உண்மையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதைக்கொண்டு, கெடிலக் கரை நாகரிகத்தின் பழைமை புலனாகிறது.

உலகில் பழைய எகிப்திய நாகரிகமும், மெசபட்டோமிய நாகரிகங்கள் எனப்படும் சூமிரிய நாகரிகம் - பாபிலோனிய நாகரிகம் - அசிரிய நாகரிகம் ஆகிய நாகரிகங்களும், இந்தியச் சிந்துவெளி நாகரிகமும், அமெரிக்கக் கண்டத்தின் பழைய நாகரிகங்களான ஆஸ்ட்டெக் நாகரிகம் - மாயா நாகரிகம் இன்கா நாகரிகம் ஆகிய நாகரிகங்களும் இன்ன பிற பல்வேறு நாட்டு நாகரிகங்களும் ஒரு காலத்தில் தோன்றி இன்னொரு காலத்தில் மறைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன. ஆனால், கெடிலக்கரை நாகரிகம் தோன்றி - வளர்ந்து - மறைந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை - வளர்ந்துகொண்டே யிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே, சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் கி.மு. 3000 - மறைவு கி.மு. 1500 எனவும், மெசபட்டோமியா முதலிய பழைய நாகரிகங்களின் தோற்றம் கி.மு. 6000 - மறைவு கி.மு. 3000 எனவும்