பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை நாகரிகம்

505


திருவள்ளுவர், இறுதிக் குறளில் கண்ணோட்டத்தின் உயர் எல்லைக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளார். உலகில் எவர் எவரோ எது எதையோ நாகரிகம் என்கின்றனர். அந்த உலகியல் நாகரிகங்களினின்றும் உண்மையான நாகரிகத்தை வேறு பிரித்து உணர்த்துகிறார் வள்ளுவர்; யாவரும் விரும்பத்தக்க உண்மையான நாகரிகம் இதோ இருக்கிறது என எடுத்துக் காட்டுகிறார் பொய்யாமொழியார், அஃதாவது, ‘எவரும் விரும்பும்படியான அருட் கண்ணோட்டம் என்னும் நாகரிகத்தை விரும்புபவர், ஒருவர் நஞ்சை ஊற்றித் தர நேரில் பார்த்தும், அவரை மகிழ்விப்பதற்காக அந் நஞ்சை அருந்தி அமைதிகொள்வர்’ - என்பதுதான் திருவள்ளுவனார் நாகரிகம் என்னும் பண்புடைமைக்குக் கூறும் விளக்கமாகும்.

எனவே, திருவள்ளுவரின் கருத்துப்படி, வானளாவ நூறடுக்கு மாளிகை - கூடகோபுரம் கட்டி வாழ்வதோ, ஒருவர்க்கு ஒரு சிற்றுந்துவண்டி (கார்) வீதம் வைத்து வாழ்வதோ, ஆரவார ஆடையணிகலன்கள் அணிந்து வாழ்வதோ, உலகிலுள்ள எல்லாக் கல்வி - கலைகளையும் கற்று வாழ்வதோ, அனைத்து அறிவியல் படைப்புகளையும் பயன்படுத்தி வாழ்வதோ உண்மையான நாகரிகங்கள் ஆகா; இவை இருப்பினும் இல்லாவிடினும், அருட் கண்ணோட்டம் உடைமையே உயரிய உண்மையான நாகரிகமாகும் - என்பது தெளிவு. பேரிரக்கமாகிய - அருட் கண்ணோட்டமாகிய உண்மை நாகரிகத்திற்கு வள்ளுவர் கூறும் பெயர் ‘நயத்தக்க நாகரிகம்’ என்பதாகும். இந்த நயத்தக்க நாகரிகமே கெடிலக்கரை நாகரிகம்.

ஒருவரின் உடல்மட்டும் வளர்ந்திருத்தல் முழுவளர்ச்சி யாகாது; உடல் வளர்ச்சியுடன் அவருடைய உள்ளப் பண்பும் உயிராற்றலும் ஒருசேர வளர்ந்திருந்தாலே அவர் முழுவளர்ச்சி உடையவராக மதிக்கப்படுவார். அது போலவே, ஒரு நாடும் செல்வவளத்தால் வளர்ந்திருப்பது மட்டும் நாகரிகமாகாது; அதனுடன் கல்வி கலைகளாலும், உயர் ஒழுக்கப் பண்புகளாலும் வளர்ந்திருந்தாலேயே, அந்நாடு உயரிய உண்மையான முழு நாகரிகம் உடையதாக மதிக்கப்படும். பண்பால் வளராமல் செல்வத்தால் மட்டும் வளர்ந்திருக்கும் ஒரு நாட்டினும், செல்வத்தால் வளராமல் பண்பால் வளர்ந்திருக்கும் ஒருநாடு உயரிய நாகரிகம் உடையதாகப் போற்றப்படும். இந்த உயர் நாகரிகப் பண்பு பொதுவாகத் தமிழக முழுவதற்கும் உண்டு; சிறப்பாகக் கெடிலக்கரைக்கும் உண்டு.

கெடிலக்கரை நாகரிகத்தை விளக்கப் பொதுவாக இந்நூல் முழுதும் துணை புரியினும், சிறப்பாக இந்நூலிலுள்ள ‘கெடில நாட்டுப் பெருமக்கள்’ என்னும் தலைப்பு பெருந்துணை புரியும். ஒரு நாட்டின் உயர்வையோ அல்லது தாழ்வையோ அந்நாட்டின் வளத்தால் வரையறுக்க முடியாது; அந்நாட்டு