பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

கெடிலக்கரை நாகரிகம்


இன்னும் வெகு தொலைவில் இல்லை. இதற்குரிய பெருமை கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டைச் சாரும்.

கெடிலக்கரை நாகரிகம்

‘ஒருமையின் உலகெலாம் ஓங்குக’ என வள்ளலார் கண்ட ஒரே உலகக் கொள்கையும், எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணியுள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் என அவர் கண்ட ஒத்துரிமைக் கொள்கையும் இன்று உயர்ந்த நாகரிகக் கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றன. வள்ளுவனார் தண்ட நயத்தக்க நாகரிக உள்ளம் வளர்ந்தாலேயே, வள்ளலார் கண்ட ஒரே உலக ஒத்துரிமைக் கோட்பாடு வெற்றி பெற முடியும். என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும்; இதுதான் கெடிலக்கரை நாகரிகம்!

அணு குண்டுகளையும் நீரகக் (ஹைட்ரசன்) குண்டுகளையும் செய்து விறகு அடுக்குவதுபோல அடுக்கிவைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் படைக் கருவிகளைப் படைத்து வைத்துக்கொண்டு காலத்தை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் பாராளுமன்றங்களில் படித்த பெருமக்கள் நாற்காலி, மிதியடி முதலியவற்றைத் தூக்கியெறிந்து, ஒருவரோடொருவர் அடித்துப் பிடித்துக்கொள்ளும் இவ்வுலகில் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது போல, வெளியிலேயுள்ள வேண்டாத பிணக்குகளையெல்லாம், உலக நாடுகளின் ஒற்றுமைக் கழகமாகிய ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) மன்றத்திலும் புகுத்திப் போர் விளையாட்டு புரிகின்ற இவ்வுலகில் ஒருவரையொருவர் உயிரோடு அப்படியே எடுத்து விழுங்கிவிட முயலும் இவ்வுலகில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும்’ நயத்தக்க நாகரிகம் நானூறு கோடி மக்களுக்கும் வேண்டும் என்னும் நல்லுரையை வடலூர் வள்ளலார் வாயிலாக நயமாக அறிவிக்கிறது கெடிலக்கரை நாகரிகம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” [1]என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே முழங்கிய தமிழநாகரிகம் இன்றுவரையும் சிறிதும் ஒளிகுன்றாமல், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அளவுக்குக், கெடிலக்கரை நாட்டில் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. வாழ்க கெடிலக் கரை நாகரிகம்!

[2]“நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர் -
அவ்வழி நல்லை வாழிய நிலனே.”


  1. புறநானூறு - 192 கணியன் பூங்குன்றனார்.
  2. புறநானூறு - 187: ஒளவையார்.