பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கெடிலக்கரை நாகரிகம்


சமயத்திற்கு மாறினார். இது பொறாத சமணர் சமண சமயத்தவனாயிருந்த பல்லவ மன்னனிடம் இதைக் கூறி, நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட ஏற்பாடு செய்தனர். கடலிலே எறியப்பட்ட நாவுக்கரசர், கடலோடு கலக்கும் கெடில ஆற்றின் வழியாக மேற்கு நோக்கி முன்னேறி, திருப்பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் உள்ள கரையேற விட்ட குப்பம்’ என்னும் இடத்தில் கரையேறினார்; பின்னர் நேரே திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானை வழிபட்டார்.’

இது சேக்கிழாரின் பெரியபுராண நூலையொட்டிய வரலாறு. செவிவழி வரலாறும் இப்படித்தான் செல்கிறது.

[1]"வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்"

என்பது பெரியபுராணப் பாடல். சேக்கிழாரால் ‘திருப்பாதிரிப் புலியூர்ப் பாங்கர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இடம் ‘கரையேறவிட்ட குப்பம்’ என்னும் சிற்றுார். பாங்கர் என்றால் பக்கம். திருப்பாதிரிப் புலியூர்க்குத் தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் கரையேறவிட்ட குப்பம் இருக்கிறது. திருநாவுக்கரசராம் அப்பர் அடிகள் இந்த இடத்தில் வந்து கரையேறினமையால் இது, ‘கரையேறவிட்ட குப்பம்’ என்னும் காரணப் பெயரைப் பெற்றது. இந்த ஊருக்கு ‘வண்டிப் பாளையம்’ என்னும் வேறொரு பெயரும் உண்டு. இந்தக் காலத்தில், கரையேறவிட்ட குப்பம் என்னும் வழக்கு மறைந்து, வண்டிப் பாளையம் என்னும் பெயரே மக்களின் நாவிலும் எழுத்திலும் நடமாடுகிறது. ஆனால் ஆவணப் (ரிஜிஸ்டர்) பதிவுகளில், இன்றும் ‘கரையேற விட்டவர் குப்பம் மதுரா’ என்று பொறிக்கப்படுகிறது

இந்தக் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரைக் கொண்டு, அப்பர் இங்கேதான் கரையேறினார் என்பது தெளிவாகிறது. அப்படியென்றால், கடல் இங்கே இருந்தது என்று எண்ணக்கூடாது. இங்கிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவு சென்றால்தான் கடல் கிடைக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அந்தக் காலத்தில் கெடிலம் இந்த ஊர் வழியாக ஓடிக் கடலில் கலந்திருக்கிறது; எனவே, அப்பர் கடலிலிருந்து


  1. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 131.