பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கெடிலக்கரை நாகரிகம்


நூற்றாண்டுகள் பின் தள்ளியிருக்க முடியாது; ஓரிரு நூற்றாண்டுதான் பிற்பட்டிருக்க முடியும். பல நூற்றாண்டுகள் பிற்பட்டவராயிருந்திருந்தால், தமக்குள் அண்மை நூற்றாண்டினராகிய மூவருக்கும் பின்னால் நாலாமவராக மாணிக்கவாசகர் வைத்து எண்ணப்பட்டிருக்க மாட்டார்; பிற்காலத்துத் தோன்றிய சைவப் பெரியார்கள் சிலரைப்போல மாணிக்கவாசகர் தனித்து விட, அந்த மூவரும் மூவராகவே நின்றுவிட்டிருப்பர். அங்ஙனமின்றி, இந்நால்வரும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மிகப் பெரிய சைவத் தலைகளாக விளங்கினமையால்தான் ‘நால்வர்’ என இணைத்துச் சிறப்பிக்கப்பெற்றனர். இஃது இயற்கையின் தீர்ப்பு! ஆம், மக்களின் தீர்ப்பு! எனவே, பத்தாவது நூற்றாண்டினர் மணிவாசகர் என்று கொள்ளலாம்.

இந்தக் கருத்துக்கு எதிராக அப்பர் தேவாரத்திலிருந்து ஓர் அகச்சான்று காட்டப்படுகிறது. அப்பர் தமது திருவாரூர்த் தேவாரப் பதிகத்தில்,

"நரியைக் குதிரைசெய் வானும்
நரகரைத் தேவுசெய் வானும்
விரதம் கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்...

என்று இறைவனின் திருவிளையாடல்களைக் கூறியுள்ளார். இதிலுள்ள ‘நரியைக் குதிரை செய்வானும்’ என்னும் பகுதியைக் கொண்டு, நரி பரியாக்கிய கதைக்கு உரிய மணிவாசகர் அப்பருக்கு முற்பட்டவராவார் என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால், இறைவன் மணிவாசகருக்காக நரியைப் பரியாக்கிய கதை இங்கே அப்பரால் குறிப்பிடப்படவில்லை. இறைவன் எதையும் செய்யவல்ல ‘சித்தர்’ என்ற கருத்திலேயே அப்பர் இதனைக் கூறியுள்ளார். அஃதாவது, இறைவன், நரியைக் குதிரையாக்க வல்லவன் - நரகரைத் தேவராக்க வல்லவன் - தாமாகவே விரதம் எடுத்துக் கொண்டு ஆடவல்லவன் - விதை போடாமலேயே செடி கொடிகளை முளைக்கச் செய்பவன் - என்பதாக இறைவனின் சிறப்பு மிக்க ‘சித்து’ விளையாடல்கள் கூறப்பட்டிருப்பதை இங்கே காணலாம். எனவே, இந்தத் தேவாரப் பகுதிக்கும் மணிவாசகர் பற்றிய கதைக்கும் இங்கே தொடர்பேயில்லை . தமிழறிஞர் எம். சீநிவாச அய்யங்கார் ‘தமிழாராய்ச்சி’ என்னும் தமது நூலில், ‘நரிபரியாக்கிய கதை தமிழகத்தில் பண்டு தொட்டு வழங்கி வருவது; அதற்கும் மணிவாசகருக்கும் தொடர்பில்லை’ என்பதாகக் கூறியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது எனவே, மணிவாசகர், தேவார