பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நதி வளர்த்த நாகரிகத்தைப் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. ஆற்றின் தொடக்கம் முதல் அது கடலில் கலக்கும் வரை, பாய்ந்து வந்த பகுதிகளில் உள்ள ஊரும், நகரும், நாடும் பற்றிய செய்திகள் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் நிலயியலும், மக்கள் இயல்பும், வரலாற்றுச் செய்திகளும் வகுத்தும் தொகுத்தும் வரையப்பட்டுள்ளன. இன்றைய விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கெடில ஆறு வளர்த்த நதி நாகரிகம் பற்றி, மிகச் சிறந்ததொரு ஆவணமாக இவ்வாய்வு நூல் திகழ்கிறது.

ஆசிரியர் சுந்தர சண்முகனார் ஆற்றோரத்தில் பயணம் செய்து அரிய செய்திகளைத் திரட்டித் தந்துள்ளார். ஆசிரியர், வரலாற்று அறிஞர், சமூகவியல் ஆய்வாளர் ஆதலால் தமிழ்ச் சமூகத்தின் நாகரிக, பண்பாட்டுக் கூறுகளைத் திட்ப நுட்பத்துடன் விளக்குகிறார். நுண்ணறிவும், நூலறிவும் மிக்க ஆசிரியர் தாம் நேரில் சென்று பார்த்த செய்திகளையும் வழிவழியாக வழங்கிவரும் செவிவழிச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். ஊர்களின் பேர்களை மட்டுமே கூறாமல், அந்த ஊர்கள் வளர்ந்த கதைகளையும் கதைகதையாய்ச் சொல்லுகிறார். நகரங்களின் பெயர்ப் பட்டியலாக இல்லாமல் நகரங்கள் வளர்த்த நாகரிகங்களையும் அடையாளம் காட்டுகிறார்.

நூலாசிரியர் பன்னூல் பயிற்சி மிக்கவர். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவர். அரிய ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை எழுதிப் பேரும் புகழும், பரிசும் பெற்றவர்.

மிகச் செவ்விய திட்டத்துடன் ஆற்றோரத்தில் நீண்ட நெடிய பயணம் செய்து, பல ஆண்டுகள் உழைத்து, கெடில நதி நாகரிகத்தின் தனிச்சிறப்புக்களைத் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

ஆசிரியர் படைத்த ஒவ்வொரு நூலும் வளர்தமிழுக்கு வளம் சேர்க்கும் அரிய ஆய்வு நூலாக அமைந்துள்ளதை அறிஞர் உலகம் தொடர்ந்து போற்றி வருகிறது.

ஆசிரியர் சுந்தர சண்முகனார் 'தமிழ்ப் புதுவை'க்குப் புகழ் சேர்க்கும் புலவர்; அறிஞர் போற்றும் அறிஞர். தமது நூல்களால் காலத்தை வென்று வாழும் பேராசிரியர். ஆராய்ச்சி மதுகையால் இறவாப்புகழ் பெற்ற ஏந்தல்.

இது ஒரு ஆற்றின் கதையல்ல. ஒரு சமூகத்தின் கதை, ஒரு இனத்தின் கதை, ஒரு நாகரிகத்தின் கதை. ஆற்றங்கரை நாகரிகத்தை அறிவோம், ஆராய்வோம். வளர்வோம்.