பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கெடிலக்கரை நாகரிகம்


நூற்றாண்டளவில் முறையே அடுத்தடுத்து வாழ்ந்தவராய் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை அனைவரும் ஏற்றுக் கொள்வது அரிது. காலவாராய்ச்சி மிகவும் கடுமையானது; அதற்குத் திட்டவட்டமாய் அறுதியிட்டு உறுதி கூறி முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது. அந்தந்தக் காலச் சூழ்நிலையைக் கொண்டு இப்படி யிருந்திருக்கலாம் எனக் குறிப்பாகவே கூறமுடியும்.

இந்த அடிப்படையில் நோக்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலத்தையடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்பதும், அந்தக் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் புலப்படும். எனவே, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன் கெடிலம் திசைமாறி யிருக்கலாம் என்பது தெளிவு.

மாணிக்கவாசகருக்காகக் கெடிலம் திசைமாறியதாகத் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் கூறப்பட்டிருப்பதனால் மட்டும். கெடிலம் பத்தாம் நூற்றாண்டில் - அதாவது ஆயிரம் ஆண்டுகட்கு முன் திசைமாறி யிருக்கலாம் என்ற முடிவுக்கு வரவில்லை; அதற்கு வேறு இயற்கைச் சான்றும் உள்ளது. மாணிக்கவாசகருக்காக ஆறு திசைமாறியது என்பதை நம்பாவிட்டாலும், மாணிக்கவாசகர் காலத்தில் திசைமாறி யிருக்கலாம் என்பதையாவது நம்பலாம் என்ற முடிவு, முன்னமே (பக்கம் - 67) தக்க சான்றுடன் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மேலும் துணைசெய்யும் இயற்கைச் சான்றாவது:

திசை மாறுவதற்கு முன் கெடிலம் ஓடியதாகச் சொல்லப்படும் பழைய பாதையை இப்போது பார்த்தால், அங்கே ஒரு காலத்தில் ஓர் ஆறு ஓடியதாக யாரும் சொல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நோக்குடன் பார்த்தால், அந்தப் பழைய பாதை சிறிது பள்ளமாயிருப்பதையும் ஆங்காங்கே சிறுசிறு ஓடைகள் இருப்பதையுங்கொண்டு, முன்பு ஆறு ஓடியிருக்கலாம் என்று கூற முடியும். ஆனால், பொது மக்கள் இயற்கையாகப் பார்த்தால், ‘அந்த இடத்தில் ஆறு ஓடியதாகச் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அந்தப் பாதை மாற்றம் பெற்று நன்செய் வயல் பகுதியாகக் காட்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய மாற்றம் பெறவேண்டுமானால், குறைந்தது ஆயிரம் ஆண்டு காலமாயினும் தேவைப்படும். ஓர் ஆற்றின் பாதை தன் பழைய உருவை இழந்து, தன் இரு கரைப் பக்கங் களிலுமுள்ள வயல் பகுதியோடு வயல் பகுதியாய்க் கலந்து மாறுவது என்பது இரண்டு மூன்று நூற்றாண்டு கால அளவில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியன்று. எனவே, இற்றைக்கு ஆயிரம்