பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கெடிலக்கரை நாகரிகம்


புலப்படும். ஆனால், இப்போது திருத்துறையூருக்கு வடக்கே பெண்ணை ஓடுகிறது. திருத்துறையூருக்கும் திருவதிகைக்கும் இடையே ஆறு கிடையாது.

பெண்ணையினும் கெடிலத்தின் திசைமாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சியாகும். இந்தத் திசைமாற்றம் திருவயிந்திரபுரத்தில் ஏற்பட்டிருப்பதாக முன்னர்க் கூறினோம். பத்தாம் நூற்றாண்டிற்குமுன், வானமாதேவிப் பக்கத்திலிருந்து கிழக்குநோக்கி ஓடிவந்துகொண்டிருக்கும் கெடிலம், திருவயிந்திரபுரத்தில் கேப்பர் மலையிலிருந்து பிதுங்கி நீட்டிக்கொண்டிருக்கும் சிறு குன்றைச் சிறிது தொலைவு வடக்கு நோக்கி வளைந்து சுற்றிக்கொண்டு மீண்டும் கிழக்குநோக்கிக் கேப்பர்மலை அடிவாரத்தை ஒட்டியே கரையேற விட்ட குப்பம் வழியாக ஓடிக்கொண்டிருந் திருக்கவேண்டும். பின்னர்ப் பத்தாம் நூற்றாண்டு அளவில், திருவயிந்திரபுரத்து மலைப்பிதுக்கத்தில் வடக்கு நோக்கி வளைந்த கெடிலம், சிறிது தொலைவிற்குள்ளேயே மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பாமல், தொடர்ந்து ஒரு கி.மீ. தொலைவிற்கு வடக்கு நோக்கியே ஓடிக்கொண்டிருக்கத் தொடங்கிவிட்டது. வெள்ளப் பெருக்கின் மிகுதியினால் இப்படி நடந்திருக்கவேண்டும். இவ்வாறு நெடுந்தொலைவு வடக்கு நோக்கி ஓடிப் பிறகு கிழக்கு நோக்கித் திரும்பியதால் தான், முன்னர்த் திருப்பாதிரிப்புலியூருக்குத் தெற்கே ஓடிக்கொண்டிருந்த ஆறு இப்போது அந் நகருக்கு வடக்கே காணப்படுகிறது.

கெடிலத்தின் சுவையான திசைமாற்ற வரலாறு இதுதான்!