பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் கலக்குமிடம்

75


கொள்ளலாமே! இதற்கு முயற்சி நடை பெறாமலும் இல்லை. கடலூர் நகராண்மைக் கழகம் 1938 ஆம் ஆண்டில் கடற்கரையில் மின்விளக்குப் போட்டும் பூங்கா அமைத்தும் சில ஏற்பாடுகளைச் செய்தது. ஆயினும் இந்தச் சீரமைப்பு தொடர்ந்து போற்றப்படவில்லை. இனியாயினும் தக்க சீர்திருத் தங்களைச் செய்து போதிய பேருந்து வண்டிகளை விட்டால், பொதுமக்கள் கடலூர்ச் கடற்கரையைக் கைவிடாமல் அதற்கும் பெருமையளித்துத் தாமும் பயன் பெறுவர். என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும்.

தென்கிளை

கெடிலத்தின் போக்கில், கடற்கரைக்கு மேற்கே சிறிது தொலைவில் கெடிலத்திலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் கிளைதான் மிகமிக இன்றியமையாதது. இந்தக் கிளை ‘உப்பனாறு’ என அழைக்கப்படுகிறது. இது கெடிலத்திலிருந்து பிரிந்து தெற்கு நோக்கி 4 கி.மீ. தொலவு ஓடி, கடலூர் முதுநகர் (Cuddalore O.T.) என அழைக்கப்படும் கூடலூருக்கு அருகில் கடலோடு கூடுகிறது. இந்தத் தென்கிளையில் படகுப் போக்குவரவு உண்டு. கெடிலத்தின் பிரிவாகிய இந்த உ.ப்பனாற்றுப் பகுதிதான் கூடலூர்த் துறைமுகம் என அழைக்கப்படுகிறது. இந்த உப்பனாற்றின் மேற்குக் கரையில் கூடலூர் நகரம் உள்ளது.

கழிமுகத் தீவு - அக்கரை

கிழக்கே உப்பனாற்றிற்கும் கடலுக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலும், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு தெற்கு எல்லைகளாகக் கெடிலத்தின் தென்கிளையாகிய உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக் கழிமுகத் தீவு ‘அக்கரை’ என மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத்தோப்பு, கோரி என்னும் மூன்று சிற்றூர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும். தீவிற்குச் சென்றுவரப் படகுப் போக்கு வரவு உண்டு.

கடல் - முகத்துவாரம்

கெடிலத்தின் காட்சிகளுள் மிகச் சிறந்த தலையாய காட்சி, கெடிலத்தின் தென் கிளையாகிய உப்பனாறு கடலோடு கூடும் முகத்துவாரக் காட்சிதான்! ஆறு கடலோடு கூடும் இந்தக் கூடல், வரலாற்றில் குறிப்பிடத்தக்க கூடலாகும். இந்தக் கூடலினால்தான், இதன் அருகில் அமைந்துள்ள நகருக்குக் ‘கூடலூர்’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனக்