பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கெடிலக்கரை நாகரிகம்


சொல்லிவிடலாம். பிற ஆறுகளைப்போல் கெடிலமும் தொடக்கத்தில் ஒடுக்கமாயிருப்பினும் இதனினும் பள்ளமும் ஒடுங்கிய பாதையும் உடைய நீரோட்டங்கள் எத்தனையோ உள்ளன. எனவே, ஆழமோ, பள்ளமோ, ஒடுக்கமோ உடைமையால் இந்த ஆற்றிற்குக் கெடிலம் என்ற பெயர் சிறப்பாக ஏற்பட்டிருக்க முடியாது. அப்படி நோக்கினால், இதனினும் வேறு சில ஆறுகளுக்கே கெடிலம் என்னும் பெயர் மிகப் பொருந்தும்.

மற்றும், கெடிலம் என்னும் சொல்லுக்கு, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்), ஒடுங்கிய பாதை என்னும் முப்பொருள் களையும் வின்சுலோ எப்படி எங்கிருந்து கண்டு பிடித்தார் என்பது தெரியவில்லை. இஃது ஆராய்ச்சிக்கு உரிய தொன்று. வின்சுலோ, கெடிலம் என்னும் சொல்லைத் தமிழ்ச் சொல்லாகக் கொள்ளாமல், வடமொழிச் சொல்லாகக் கொண்டே, இப்பொருள்களைக் கூறியிருக்கிறார் என்று கருத வேண்டியிருக்கிறது. அவரது அகராதியில் கெடிலம், S. எனக் கெடிலம் என்னும் சொல்லின் பக்கத்தில் ‘S’ என்னும் குறியீடு காணப்படுகிறது. இந்த S என்பது Sanskrit என்னும் சொல்லின் சுருக்கக் குறியீடு (Abbreviation) ஆகும். Sanskrit என்றால், சமசுகிருதம் - அதாவது வட மொழிச் சொல் என்று பொருளாம். எனவே, கெடிலம் என்பது வடமொழிச்சொல் என வின்சுலோ கருதினார் என்பது விளங்கும். அதனால் தான், கெடிலம் என்னும் சொல்லுக்கு ஆழமான ஓடை, பள்ளம் என்றெல்லாம் அவர் பொருள் கூறியிருக்கிறார். அப்படியே கெடிலம் என்பதை வடிமொழிச் சொல்லெனக் கொண்டாலும், வடமொழியில் இந்தப் பொருள்களுடன் இப்படி ஒரு சொல் உண்டா என்பது ஐயப்பாட்டிற்கு உரியது.

வடமொழியில் கெடிலம் என ஒரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. வடமொழி வல்லுநர்களின் கருத்தும் இதுவே. வடமொழியில் 1. கடா (gada), 2. கடுலா (gadula), 3. கடலிகா (gaddalika), 4. கடரிகா (gaddarika) என்னும் சொற்கள் உள்ளன. இச்சொற்களுக்கு ‘A Sanskrit - English Dictionary By Sir Monier Williams, M.A., K.C.I.E’ - என்னும் வடமொழி - ஆங்கில அகராதியில்,

(கடா ) gada = ditch.

(கடுலா ) gadula = hump - backed.