பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கெடிலக்கரை நாகரிகம்


தான். அவர் கெடிலம் என்னும் சொல்லை வடசொல்லாகக் கொண்டு, ஒரு நதி, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்) என்றெல்லாம் பொருள் எழுதியுள்ளமை, பிற்கால ஆராய்ச்சியாளர்க்குக் குழப்பம் விளைவிக்கலாம். அக் குழப்பத்தைப் போக்கவே இங்கு இவ்வளவு எழுத நேர்ந்தது. எனவே, கடா - கடில - கெடிலம் எனக் கடாவுக்கும் கெடிலத்திற்கும் முடிச்சுப் போடாமல், கெடிலம் என்பதைத் தமிழ்ச் சொல்லாகவே கொள்ளவேண்டும்.

கெடிலம் என்பது தமிழ்ச் சொல்லாயின் அதன் பொருள் என்ன? இந்த ஆற்றுக்குக் கெடிலம் என்னும் பெயர் எதனால் ஏற்பட்டது? என்ற வினாக்கள் எழலாம். வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயர்களுக்குத்தான் நாம் பொருத்தமான பொருளும் சரியான காரணமும் கூறமுடியுமே தவிர, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய (Pre - History) காலத்தில் ஏற்பட்ட பெயர்களுக்கு நாம் சரியான பொருள் விளக்கம் தர முடியாது. மற்றும், ஊர்களின் பெயர்களுக்கு விளக்கம் கொடுக்க முடிந்தாலும், ஆறுகளின் பெயர்களுக்கு விளக்கம் கொடுப்பது அருமை. ஏனெனில், காலத்துக்குக் காலம் மக்கள் பெருகப் பெருக ஊர்களும் புதிது புதிதாகத் தோன்றுவதியல்பு; ஊர்கள் மக்கள் அறிந்து தோன்றுபவை; மக்களால் தோற்றுவிக்கப்படுபவை; அதனால், மக்கள் தம்மால் உண்டாக்கப்படும் ஊர்களுக்குப் பொருத்தமான காரணங்களுடன் பெயர்கள் வைக்கின்றனர்; அதனால் ஊர்கட்குப் பெயர்க்காரணப் பொருள் விளக்கம் கூறிவிட முடியும். ஆறுகளின் நிலையோ அத்தகையதன்று. மக்கள் தோன்றுவதற்கு முன்பே ஆறுகள் தோன்றிவிட்டிருக்கும். மற்றும், ஆறுகள் மக்களால் உண்டாக்கப்படவில்லை. மேலும் ஓர் ஆறு, ஓர் ஊரோடு அல்லது ஒரு நாட்டோடு அமைந்து விடவில்லை ; ஒரே ஆறு பலநாடுகளின் வழியாக பல ஊர்களின் வழியாக ஓடுகிறது. இந்த நிலைமையில், எந்த நாட்டார், எந்த ஊரார், தமக்கு முன்பே தோன்றியுள்ள ஓர் ஆற்றிற்கு எந்தக் காரணம் பற்றி எந்தப் பெயரை வைப்பது? பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய ஓர் ஆற்றுக்கு, வரலாற்றுக் காலத்துக்கு முன்பே - எப்போதோ ஏதோ ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அதன் காரணத்தைக் கண்டறிவது அறிது. பழங்கால மக்கள், தமக்கு முன்பே தோன்றியிருந்த மரம், மட்டை , இலை, கல், காடு முதலியவற்றை இப்பெயர்களால் அழைப்பதற்கு என்னென்ன காரணங்கள் கூற முடியும்? நம்மால் காரணங்கள் கூற முடியாது. அதே