பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கெடிலக்கரை நாகரிகம்


வலிந்துகூறும் அப்பொருள்களை விட்டுவிடுவோம். கடலூரை அடுத்து ஒடும் ஆறு ஆதலின் கடிலம் கெடிலம் என்றாகி யிருக்கலாம் என்று சிலர் ஒரு தோற்றமாகக் கூறுகின்றனர். இது போன்ற பெயர்க்காரணங்கள் எல்லாம், ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகக் கூறும் பொருந்தா உரைகளாகும். கெடிலம் இருக்கட்டும்! ஊர் அறிந்த உலகறிந்த காவிரி யாற்றின் பெயர் விளக்கமே பலவிதாகப் பேசப்படுகிறதே!

காவிரி ஆறானது காவேரி எனவும் அழைக்கப்படுகிறது. உலக வழக்கில் மட்டுமன்று; செய்யுள் வழக்கிலும் காவேரி, காவிரி என்னும் இருவேறு பெயர்களும் காணப்படுகின்றன. சங்க காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்

[1]"கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி."
[2]“காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி."
[3]"ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி.”
[4]"பரப்பு நீர்க் காவிரிப் பாவை."

என்று இளங்கோவடிகள் காவேரி, காவிரி என்னும் இரு பெயர்களும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பொருநராற்றுப்படை முதலிய சங்க இலக்கியங்களில் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட இடங்களில் காவிரி என்னும் சொல்லாட்சியே காணப்படுகிறது. இடைக் காலத்தில் எழுந்த கம்பராமாயணத்தில்கூட,

[5]"காவிரி நாடன்ன கழனிநா டொரீஇ"

எனக் காவிரி என்றே கம்பரால் குறிப்பிடப் பட்டுள்ளது. பிற்காலத்தில் காவிரி, காவேரி என்ற இரண்டு ஆட்சிகளும் உலக வழக்கில் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் எந்தப் பெயரைச் சரியான பெயர் என்று எடுத்துக் கொள்வது? என்ன பெயர்க்காரணம் கூறுவது? காவிரி என்ற பெயருக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது; காவேரி என்ற பெயருக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது. இப் பெயர்க் காரணங்களுள் எதை ஏற்றுக்கொள்வது? முதலில் அப்பெயர்க் காரணங்களைப் பார்ப்போம்:


  1. சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
  2. சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
  3. சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
  4. சிலப். புகார்க். நாடுகாண் காதை-146
  5. கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் கங்கைகாண் படலம் - 1.