பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் - பெயரும் காரணமும்

89


மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த சையமலையில் முன்னொரு காலத்தில் அகத்தியர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அவரது கைச்செப்பு (கமண்டலம்) தண்ணிருடன் வைக்கப்பட்டிருந்தது. இது நிற்க. அசுரர்க்கு அஞ்சிய இந்திரன் அவர்களை வெல்வான் வேண்டி இறைவனுக்குப் பூசனை புரியச் சீர்காழியில் மலர் வனம் வைத்து வளர்த்து வந்தான். அம் மலர் வனத்திற்கு நீர் வசதியளிக்குமாறு அவன் விநாயகரை வேண்டிக் கொண்டான். விநாயகர் காகத்தின் வடிவில் சையமலை சென்று அகத்தியரின் கைச்செப்பு நீரைக் கவிழ்த்து விட்டார். அந்த நீர் ஆறாக விரிந்து சீர்காழிவரையும் ஒடி வந்து இந்திரனது பூந்தோட்டத்திற்குப் பயன்பட்டது. இதுதான் காவிரி ஆறு. காகத்தால் கவிழ்க்கப்பட்டு விரிந்து ஆறு ஆனதால் ‘காகவிரி என்று ஆற்றிற்குப் பெயர் ஏற்பட்டதாம். ‘காகவிரி’ என்ற பெயர் நாளடைவில் சுருங்கிக் ‘காவிரி’ என்று ஆயிற்றாம். இவ்வாறு பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இந்திரனது ‘கா’ (பூஞ்சோலை) வளர்வதற்காக விரிந்து வந்த ஆறு ஆதலின் காவிரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் காரணம் கூறப்படுகிறது. இந்தப் பெயர்க் காரணங்கள் கூறுபவர்கள், கந்தபுராணக் கதையை ஆதாரமாகக் கொண்டவர்கள். இனி, காவேரி என்பதின் பெயர்க் காரணம் வருமாறு:

கவேரன் என்பவன் வீடுபேறு அடையப் பிள்ளைப்பேறு வேண்டிப் பிரமனை நோக்கித் தவஞ்செய்தான். பிரமன் தன் மகளாகிய விஷ்ணு மாயை என்பவளைக் கவேரனுக்கு மகளாகத் தோன்றச் செய்தான். கவேரனுக்கு மகள் ஆனதால் அவள் காவேரி எனப்பட்டாள். அவள் உலோபா முத்திரை என்னும் பெயருடன் அகத்தியரை மணந்துகொண்டாள். அகத்தியர் அவளை நீர் வடிவாக்கித் தம் கைச்செப்பில் அடக்கி வைத்தார். அவரது கைச்செப்பு கவிழ்க்கப்பட்டு நீர் ஆறாகப் பெருகி ஒடியது. அதுதான் காவேரி ஆறு. கவேரன் மகளாகிய காவேரி நீர் வடிவில் ஆறாக ஓடியதால் அந்த ஆற்றிற்குக் காவேரி என்னும் பெயர் ஏற்பட்டது. இப்படிப் பெயர்க்காரணம் கூறப்படுகிறது. ஆக்கினேய புராணத்தை ஆதாரமாகக் கொண்டது இது.

ஜனகன் மகள் ஜானகி என்பதுபோலக் கவேரன் மகள் காவேரி என்று ஆனது. வடமொழி இலக்கணத்தில் ‘தத்தி தாந்த நாமம்’ எனக் கூறப்படும். இப்படிப் பார்த்தால், காவேரி என்னும் பெயரை வடமொழிச் சொல்லாகக் கொள்ளநேரும். காவிரி என்பதன் பெயர்க் காரணத்தை நோக்கின், அதனைத் தமிழ்ச்சொல்லாகக் கொள்ள முடிகிறது. சிலர் காவேரி