பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் - பெயரும் காரணமும்

91


மற்றும், கருடன் அப்பாறையில் தன் அலகால் கீறி உண்டாக்கிய சுனையிலிருந்து ஆறு தோன்றுவதால் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டது என அங்கேயே வேறொரு காரணமும் கூறப்படுகிறது. மேலும், அந்தச் சுனை அடிப்பகுதி அகலமாகவும் முடியும் முனைப்பகுதி கூர்மையாகவும் கருடன் மூக்கு போல் இருப்பதால் அந்தச் சுனையிலிருந்து தோன்றும் ஆறு கருடநதி எனப்பட்டது என்று எவரேனும் ஒரு பெயர்க் காரணம் கூறினும் வியப்படைவதற்கில்லை . (படம் காண்க : பக்கம் - 33)

அடுத்து, திருவயிந்திரபுரச் சூழ்நிலையில் வேறொரு வகையான பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது. அதாவது:

முன்னோர் காலத்தில் வைகுந்தத்திலிருந்து திருமாலானவர் திருமகளுடனும் தேவ குழுவுடனும் வான் வழியாக உலாச் சென்று கொண்டிருந்தாராம். கடலூரை யடுத்துள்ள திருவயிந்திரபுரத்துக்கு மேலே போய்க்கொண்டிருந்த போது திருமால் நீர்வேட்கை கொண்டாராம்; உடனே கீழிறங்கி, ஆங்குள்ள மலைமேல் தங்கினாராம். கருடனும் ஆதிசேடனும் நீர் கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் ஒரு கிணறு தோண்டி அதிலிருந்து நீர்கொண்டு வந்தார். கருடனோ, மலைக்குக் கீழே தன் அலகால் (மூக்கால்) தரையைக் கீறினார். அந்த இடம் ஆறாகத் தண்ணீர் பெருகியது. அதிலிருந்து அவர் தண்ணீர் கொண்டுவந்து தந்தார். அந்த ஆறுதானாம் கெடிலம். இது ஒரு புராணத்தின் கதை. இவ்வாறு கருடனால் உண்டாக்கப்பட்ட ஆறு எனச் சொல்லப்படுதலின், கருடநதி என்று அழைக்கப் படுகிறது. இது, இரண்டாவது வகையான பெயர்க்காரணம்.

கருடநதி என்பதுதான் நாளடைவில் சிறிது சிறிதாக மாறிக் கடிலநதி - கெடிலநதி என்றாகியிருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்து பொருத்தமாகப் புலப்படவில்லை. கருடன் எங்கேயோ இருக்கிறார் - கெடிலம் எங்கேயோ இருக்கிறது - இரண்டுக்கும் இடைவெளி மிகுதி - அன்றியும், திருவயிந்திரபுரப் பெயர்க் காரணம் பொருத்தமானதாய்த் தோன்றவில்லை. கெடிலம் திருவயிந்திரபுரத்திற்கு அண்மையில் முடியும் தறுவாயில் உள்ளது. அதாவது, திருவயிந்திரபுரத்துக்கு மேற்கே 90 கி.மீ. தொலைவிற்கு அப்பால் தோற்றம் எடுக்கும் கெடிலம், திருவயிந்திரபுரத்திற்குக் கிழக்கே 8 கி.மீ. அளவு தொலைவில் கடலோடு கலக்கிறது. புராணக் கதையின்படி கருடன் கீறி உண்டாக்கியதா யிருந்திருந்தால், திருவயிந்திர புரத்திற்கு மேற்கே உள்ள கெடிலத்தின் பெரும் பகுதியைப் பற்றி என்ன கூறுவது? மேடான மேற்கிலிருந்துதான் சரிவான கிழக்கு