பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கெடிலக்கரை நாகரிகம்


நோக்கித் தண்ணீர் ஓடி வந்து கொண்டிருக்கிறது. ஈண்டு, திருவயிந்திரபுரம் பற்றி வட மொழியிலுள்ள வைணவக் கந்தபுராணத்தில் உள்ள ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. திருமாலுக்காக நீர் கொண்டுவரச் சென்ற கருடன் தன் அலகால் கீறிக் கருடநதி என்னும் கெடிலத்தை உண்டாக்கியதாக இந்தப் புராணத்தில் கூறப்படவில்லை. அண்மையில் ஆறு ஒன்று வந்து கொண்டிருப்பதாகக் கருடன் திருமாலுக்குத் தெரிவித்ததாகவே இந்தப் புராணத்தின் முதல் பகுதி (அத்தியாயம்) கூறுகிறது. இந்தப் புராண ஆசிரியர் உண்மையை உள்ளவாறு கருடன் வாயிலாகக் கூறிவிட்டிருக்கிறார். எனவே, கருட பகவான் கதையைப் பற்றி ஆராய்ச்சி ஒன்றும் செய்யாமல், ‘பக்தி - புராணம்’ என்ற அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே, கெடிலத்தின் பெயர்க் காரணத்தோடு கருடனை முடிச்சுப் போடக்கூடாது.

தெய்வத்தோடு தொடர்பு படுத்தித் தெய்வத் தன்மையுடைய ஓர் ஆறாகச் சொல்லப்பட்டிருக்கிற வரைக்கும் கெடிலம் கொடுத்து வைத்ததுதான். இது போன்ற சிறப்பு எல்லா ஆறுகளுக்கும் கிடைப்பதரிது. காவிரி, கங்கை போன்ற உயர்ந்த ஆறு கட்கே இத்தகைய சிறப்பு ஏற்றிக் கூறப்பட்டுள்ளது. அகத்தியரின் கைச்செப்பில் (கமண்டலத்தில்) இருந்த நீரை, இந்திரனுக்காக விநாயகர் காகத்தின் உருவில் வந்து கவிழ்க்க, அதிலிருந்து தான் காவிரியாறு தோன்றியதாக முன்பு பார்த்தோம். பகீரதனது தவத்திற்கு இரங்கி, விண்ணுலகத்துக் கங்கையைச் சிவபெருமான் மண்ணுலகத்திற்குக் கொண்டு வந்தாராம். இது கங்கை தோன்றிய வரலாறு. இவ்விரண்டும் போலவே கதையில் கருடனால் கெடிலம் தோன்றியிருக்கிறது. கங்கை, காவிரி ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றிப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள் எவ்வளவு உண்மையானவையோ அவ்வளவு உண்மையானது, கருடனால் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கெடிலத்தின் கதையும்! இன்னும் கேட்டால், கெடிலத்தின் தோற்றம்பற்றி மற்றுமொரு புராணக் கற்பனை உண்டு. அதாவது:- ‘சிவபெருமானிடத்திலிருந்து வியர்வை நீர்போல் வெளிவந்ததுதான் கெடிலம்’ எனத் திருவதிகைப் புராணம் கூறுகிறது. கங்கை சிவனது முடியி லிருந்து வந்தது; கெடிலம் சிவனது உடலிலிருந்து வந்தது; எனவே, கங்கையைப் போன்றது கெடிலம் எனத் திருவதிகைப் புராணம் கூறுகிறது. இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தாவது: கங்கையைப் போல் - காவிரியைப்போல் ஒப்ப மதிக்கத்தக்க ஓர் உயரிய ஆறு கெடிலம் என்பதாம்.